ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் சாலைப் போக்குவரத்துத் துறை, நோன்புப் பெருநாளை முன்னிட்டு விபத்துகள் நேரக்கூடிய 33 இடங்களைக் கண்காணிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்தின்போது சாலை விபத்துகளையும் மரணங்களையும் தவிர்க்கும் நோக்கில் கண்காணிப்புப் பணிகள் இம்மாதம் 16ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதிவரை இடம்பெறும் என்று ஜோகூர் சாலைப் போக்குவரத்துத் துறை இயக்குநர் சுல்கர்னைன் யாசின் தெரிவித்தார்.
அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சாலைப் பயனீட்டாளர்களுக்கு உதவவும் ஜோகூர் சாலைப் போக்குவரத்துத் துறை 300 அதிகாரிகளைப் பணியில் ஈடுபடுத்தவிருப்பதாக அவர் சொன்னார்.
வேகக் கட்டுபாட்டை மீறி வாகனம் ஓட்டுவது, சாலை விதிகளை மீறுவது, வாகன இருக்கைவார் அணியாதது, மோட்டார்சைக்கிளில் செல்லும்போது தலைக்கவசம் அணியாதது, வரிசையில் நிற்காமல் பிற வாகனங்களை முந்திச் செல்வது, வாகனம் ஓட்டும்போது தொலைபேசிகளைப் பயன்படுத்துவது ஆகிய விதிமீறல்களை அதிகாரிகள் கண்காணிப்பர்.
கண்காணிப்பை இன்னும் தீவிரப்படுத்த அமலாக்க அதிகாரிகளின் சீருடையில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் திரு சுல்கர்னைன் கூறினார்.
ஜோகூர் மாநிலம் முழுவதிலும் பேருந்து நிலையங்களிலிருந்து புறப்படும் பேருந்துகளைக் கண்காணிக்க 15 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கண்காணிப்பின் மூலம் இதுவரை 17 விதிமீறல்களை அதிகாரிகள் கண்டனர். அவர்களில் சிலர் வாகனம் ஓட்டும்போது கைப்பேசியைப் பயன்படுத்தினர்.
மேலும் சிலர் தொடர்ந்து நான்கு மணி நேரத்துக்கும் அதிகமாக வாகனங்களை ஓட்டினர்.
தொடர்புடைய செய்திகள்
புதன்கிழமை (மார்ச் 18), கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடங்கிய இரண்டு மணிநேரத்துக்குள் விதிமுறைகளை மீறிய 80 பேரை அதிகாரிகள் பிடித்தனர்.
மார்ச் 16ஆம் தேதிக்கும் 18ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அமலாக்க அதிகாரிகள் ஜோகூர் மாநிலம் முழுவதிலும் 29,692 வாகனங்களைச் சோதனையிட்டனர்.
சோதனை முடிவில் 2,510 வாகன ஓட்டுநர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

