ஜகார்த்தா: ‘எல் நினோ’ தாக்கத்தால் ஏற்பட்டுள்ள கோடைக்காலம் இந்தோனீசியாவில் தீவிரமடைந்து வருவதால், நாட்டின் பல வட்டாரங்கள் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. வரும் மாதங்களில் வழக்கத்தைவிடக் குறைவான மழையே பெய்யக்கூடும் என்பதால் நீர் நெருக்கடி மோசமடையக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பல வாரங்களாக மழையின்றித் தவித்து வருகின்றன. நிலைமையைக் கருத்தில்கொண்டு, வறட்சியை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு வட்டார நிர்வாகங்களுக்கு தேசியப் பேரிடர் மேலாண்மை அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் வறண்ட காலங்களில் காட்டுத்தீ, நிலப்பரப்புத் தீ விபத்துகளைத் தூண்டக்கூடிய வகையில் நிலங்களையோ குப்பைகளையோ எரிப்பதைத் தவிர்க்குமாறும் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை (ஜூலை 3) வெளியிடப்பட்ட நிலவரப்படி, யோக்யகர்த்தாவின் குனுங்கீதுல், மத்திய ஜாவாவின் செமராங், கிழக்கு ஜாவாவின் ஜெம்பர் ஆகியவை தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளாகப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மூன்று பகுதிகளிலும் குறைந்தது 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, உள்ளூர் அதிகாரிகள் தண்ணீர் விநியோக வாகனங்கள் மூலம் குடிநீரை விநியோகிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஏற்கெனவே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மத்திய ஜாவாவின் சிலாசாப், கிளாடென், ஜெபாரா, யோக்யகர்த்தாவின் பந்துல், மேற்கு ஜாவாவின் கரவாங், தாசிக்மாலாயா, சுகாபூமி, மலுக்குவின் செராம் ஆகிய பகுதிகளில் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் 7,100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தவித்து வருகின்றன. அப்பகுதிகளில் அவசரமாகத் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அவசரகால நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்தப் பல வட்டாரங்கள் 90 நாள் வறட்சி எச்சரிக்கை நிலையை அறிவித்துள்ளன. குனுங்கீதுல் பகுதி கடந்த ஜூன்முதல் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ள வேளையில், மேற்கு ஜாவாவும் ஜூலையில் வறட்சி எச்சரிக்கையை அறிவித்துள்ளது.
இதற்கிடையே, கால்நடைகளுக்கான தீவனப் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு, வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய, அதிகப் புரதச்சத்து கொண்ட தீவனப் பயிர்களின் சாகுபடியை விரிவுபடுத்தி வருவதாக இந்தோனீசியாவின் வேளாண்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

