சில்ஹெட்: பங்களாதேஷில் தட்டம்மை நோய் மிகவும் தீவிரமாகப் பரவி வரும் சூழலில், அதனைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பலவீனமான தரவு மேலாண்மை, போதிய விழிப்புணர்வின்மை மற்றும் தடுப்பூசி போடுவதில் ஏற்பட்ட தொய்வு ஆகியவை இந்த நிலைக்கு முக்கியக் காரணங்களாகக் சுட்டப்படுகின்றன.
உலக அளவில் தடுப்பூசி போடும் விகிதம் குறைந்து வருவதால் ஏற்படும் ஆபத்து குறித்துப் பிற நாடுகளுக்கும் இது ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
2025ஆம் ஆண்டில் வழக்கமான தடுப்பூசி போடும் திட்டங்களில் தொய்வு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்தத் தட்டம்மைப் பரவல் தீவிரமடையத் தொடங்கிய மார்ச் நடுப்பகுதி முதல் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், பங்களாதேஷில் கிட்டத்தட்ட 202,000 பேருக்குத் தட்டம்மைப் பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் 22,000 பேருக்கு ஆய்வுக்கூடப் பரிசோதனை மூலம் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டில் உலகிலேயே மிக அதிகமான தட்டம்மைச் சந்தேகச் சம்பவங்கள் பதிவான நாடாகப் பங்களாதேஷ் உள்ளது. வேகமாகப் பரவக்கூடிய இந்த நோயினால் இதுவரை 1,147 பேர் உயிரிழந்துவிட்டனர். பதிவான உயிரிழப்புகளில் 94 விழுக்காட்டினர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க் பல்கலைக்கழகத்தின் உலகப் பொதுச் சுகாதாரப் பள்ளியின் பேராசிரியரும் உலகச் சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசி ஆலோசகருமான மார்க் ஜிட் இது குறித்துக் கருத்துரைத்தார்.
“இது ஒவ்வொரு நாட்டுக்கும் விடுக்கப்பட்டுள்ள ஒரு கடுமையான எச்சரிக்கையாகும்,” என்று அவர் குறிப்பிட்டார். நெருக்கடி நிலை ஏற்பட்ட பிறகு அதற்குத் தீர்வு காண்பதைவிட, தடுப்பூசிகளின் மூலம் நோய் பரவாமல் முன்னெச்சரிக்கையாகத் தடுப்பதே எளிதானது, செலவு குறைவானது மற்றும் பாதுகாப்பானது என்றும் அவர் கூறினார்.
மேலும், ”தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அவசரகால நடவடிக்கைகள் தட்டம்மைப் பரவலை இறுதியில் கட்டுப்படுத்திவிடும். இருப்பினும், அதற்குள் பலர் தட்டம்மையால் பாதிக்கப்படுவர். சில உயிரிழப்புகளும் ஏற்படும்,” என்றும் அவர் கூறினார்.
நோய்ப் பரவலை முடிவுக்குக் கொண்டுவர பங்ளாதேஷ் அரசாங்கம் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அந்நாட்டுப் பிரதமரின் சுகாதார விவகாரங்களுக்கான சிறப்பு உதவியாளர் ஜியாவுதீன் ஹைதர் செப்டம்பர் மாதம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார். எனினும், அக்டோபர் மாதம் எழுப்பப்பட்ட கூடுதல் கேள்விகளுக்கு அந்நாட்டு அரசாங்கத் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.
