ஜோகூர் நகரின் தூய்மையைக் கட்டிக்காக்க தீவிர முயற்சி

ஜோகூர் நகரின் தூய்மையைக் கட்டிக்காக்க தீவிர முயற்சி

படம்: த ஸ்டார்

12 Mar 2026 - 6:13 pm

2 mins read

ஜோகூர் பாரு: ஜோகூர் நகர மையத்தைக் கழிவுகள் அற்ற பகுதியாக மாற்ற மலேசிய அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

தீவிரமான துப்புரவுப் பணிகள், கடுமையான அமலாக்க நடவடிக்கைகள், மேம்படுத்தப்பட்ட கழிவு நிர்வாக உள்கட்டமைப்பு ஆகியவை மூலம் அதிகாரிகள் இலக்கை எட்ட முற்பட்டுள்ளனர்.

நகரப் பகுதியில் உள்ள 423,850 சதுர மீட்டர் பரப்பளவில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக ஜோகூர் திடக் கழிவு நிர்வாக, பொதுச் சுத்திகரிப்புக் கூட்டுறவு அமைப்பின் இயக்குநர் ஸைனல் ஃபித்ரி கூறினார்.

“குறிப்பிட்ட அந்த வட்டாரம் குப்பைகள் அற்ற பகுதியாக உருமாற்றப்படும். அப்படியென்றால் அங்கு ஒரு குப்பைக் கூட இருக்காது,” என்றார் திரு ஸைனல்.

தூய்மைப் பணிகளுக்காக ‘ஒப்ஸ் கிரேட்டர்’ என்ற இயக்கத்தைத் திரு ஸைனல் தொடங்கிவைத்தார். ஜோகூரின் நகர மையத்தில் குடியிருப்பு, வர்த்தகம், கல்வி ஆகியவற்றுக்காக 13,956 கட்டடங்கள் உள்ளன.

தொடக்கக் கட்டமாக 10,938 பழைய குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டு புதிய குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. கழிவுகளைச் சேகரிக்க 16 கனரக வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஜோகூர் நகர மையத்தைத் தொடர்ந்து தூய்மையாக வைத்திருக்க 10 நிரந்தர துப்புரவுப் பணியாளர்கள் அங்குப் பணியமர்த்தப்படுவர் என்றார் திரு ஸைனல்.

நகர மையம் பல சுற்றுப்பயணிகள் வந்துசெல்லும் இடம். அங்குதான் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளும் செயல்படுகின்றன என்ற அவர், குப்பைப் போடுவோரைப் பிடிப்பதற்கான கண்காணிப்பும் வலுப்படுத்தப்படும் என்றார்.

ஏப்ரல் 1ஆம் தேதி குப்பைப் போட்டதற்காக சிங்கப்பூர் ஆடவர் ஒருவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்றும் திரு சைனல் நினைவூட்டினார்.

நகர மையத்தின் தூய்மையைக் கட்டிக்காப்பதில் அனைவரின் பங்கும் உள்ளது என்று வலியுறுத்திய அவர், அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயல்படவேண்டும் என்றார்.

இதற்கிடையே, கோலாலம்பூரில் குப்பைப் போட்டதற்காகப் பிடிபட்ட ஐவர் துப்புரவுப் பணிகளில் வியாழக்கிழமை (மார்ச் 12) ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் நால்வர் உள்ளூர்வாசிகள், ஒருவர் வெளிநாட்டவர்.

அவர்கள் 26 வயதிலிருந்து 59 வயதுக்கு உட்பட்டோர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் 1,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதுடன் நான்கு மணி நேரம் சமூகச் சேவை செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறிப்புச் சொற்கள்
குப்பைமலேசியாஜோகூர் பாரு