சென்னை: தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி பட்டியலிலிருந்து 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அதுபற்றி ஆலோசிக்க திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனை அக்கட்சி பொதுச்செயலாளர் துறைமுருகன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.
ஆலோசனைக் கூட்டம் திங்கட்கிழமை (டிசம்பர் 22) மாலை 6 மணிக்கு காணொளி வாயிலாக நடைபெறும் எனவும் திரு துறைமுருகன் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், கழகச் செயலாளர்கள் என அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கூட்டத்தில், வரையப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
தீவிர திருத்தப் பணிகளில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன. ஒரு சில கட்சிகள் ஆதரவும் அளித்துள்ளன.

