கோலாலம்பூர்: தாய்லாந்துடனான எல்லைப் பகுதியில் மலேசியா, பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் தென் பகுதியில் ஏற்பட்டுள்ள அண்மைய தாக்குதல்களைத் தொடர்ந்து எல்லையின் வனப்பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்தியிருப்பதாகத் தற்காப்பு அமைச்சர் முகம்மது காலிட் நோர்டின் கூறினார்.
தாய்லாந்தின் கிளர்ச்சியாளர்கள் மலேசியாவுக்குள் புகுந்து வன்முறையைப் பரப்புவதைத் தடுக்க ராணுவப் படைகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“தென் தாய்லாந்தில் உள்ள அமைதியைச் சீர்குலைத்து வன்முறையைக் கையாளும் எந்தத் தரப்பும் மலேசிய மண்ணில் ஒளிந்துகொள்ளவும் அடைக்கலம் தேடவும் அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது,” என்று முகம்மது காலிட் எச்சரித்தார்.
அவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்ள தாய்லாந்து அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைப்பதாகவும் அவர் கூறினார்.
தாய்லாந்தில் நிலவும் வன்முறை குறித்தும் யாரெல்லாம் அதில் ஈடுபட்டுள்ளனர் என்பது பற்றியும் அறிந்திருப்பதால் அதிகாரிகளுக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்த மலேசியா ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்கும் என்றார் முகம்மது காலிட்.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அந்த ஒருங்கிணைப்பாளர்களைக் கூடிய விரைவில் நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுகுறித்து திரு அன்வார் பரிந்துரைகளை முன்வைக்கும்படி கேட்டிருப்பதாகவும் தகுதியானோரின் பெயர்களைச் சமர்பித்திருப்பதாகவும் முகம்மது காலிட் தெரிவித்தார்.
நீண்டகால ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தேசியப் பாதுகாப்பு மன்ற தலைமை இயக்குநருமான திரு ரபின் முகம்மது பசிரின் ஒப்பந்தம் நிறைவடைந்துவிட்டதை அவர் சுட்டினார்.
தாய்லாந்தின் தென் பகுதியில் கடந்த வார இறுதியில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதல்களில் பல்வேறு அரசாங்கக் கட்டடங்களும் வாகனங்களும் தீக்கு இரையாகின. அந்தத் தாக்குதல்களில் மூவர் காயமடைந்தனர்.
2004ஆம் ஆண்டிலிருந்து தாய்லாந்து அரசாங்கத்துக்கும் தேசியப் புரட்சி அமைப்பைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மூண்ட மோதலில் 7,000க்கும் அதிகமானோர் மாண்டதாக டீப் சவுத் வாட்ச் தரவுகள் சுட்டுகின்றன.


