அனைத்துலக விமான நிலையக் கனவு நனவாகலாம்: பேராக் முதலமைச்சர்

2 mins read
841ee128-a594-4c4d-81ba-4fbbe66d00f2
ஈப்போ நகரின் சுல்தான் அஸ்லான் ‌ஷா விமான நிலையம். - படம்: விக்கிபீடியா / இணையம்

ஈப்போ: மலேசியாவின் பேராக் மாநிலத் தலைநகரில் இருக்கும் சுல்தான் அஸ்லான் ‌ஷா விமான நிலையத்தை விரிவுபடுத்த 60 மில்லியன் ரிங்கிட் (18.3 மில்லியன் வெள்ளி) நிதி ஒதுக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துவிட்டதாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பேராக்கில் அனைத்துலக விமான நிலையத்தை அமைக்கவேண்டும் என்று நீண்டகாலமாக இருந்துவரும் கனவை நனவாக்கக்கூடிய சூழல் உருவெடுத்துள்ளதாக பேராக் முதலமைச்சர் சரானி முகம்மது பெருமை தெரிவித்துள்ளார். மலாய் மெயில் போன்ற ஊடகங்கள் சனிக்கிழமையன்று (பிப்ரவரி 1) இச்செய்தியை வெளியிட்டன.

அனைத்துலக விமான நிலையம் என வகைப்படுத்தப்பட சுல்தான் அஸ்லான் ‌ஷா விமான நிலையத்துக்கான விரிவுபடுத்தல், புதுப்பிப்புப் பணிகள் முக்கியம் என்று திரு சரானி குறிப்பிட்டார்.

“விமான நிலையம் திட்டமிட்டபடி விரிவுபடுத்தப்பட்டால் மாநில அரசாங்கம் பெரிதும் நன்றியுடன் இருக்கும், அதன் முழு ஆதரவை வழங்கும். ஈப்போவில் இருக்கும் விமான நிலையத்தை மேம்படுத்தவேண்டும் என்பது நீண்டகாலமாக இருந்துவரும் நம்பிக்கையாகும். திட்டமிட்டபடி விமான நிலையம் மேம்படுத்தப்பட்டால் குறைந்த இடைவெளியில் கூடுதலான அனைத்துலக விமானச் சேவைகளை ஈர்க்க முடியும். அதன் மூலம் பயணத் தொடர்புகளுக்கு மெருகூட்ட முடியும், வாய்ப்புகளை உருவாக்க முடியும்,” என்று பண்டார் ஸ்ரீ பொத்தானியில் நடைபெற்ற விற்பனை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அதில் இடம்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் திரு சரானி கூறினார்.

தற்போது ஸ்கூட், சுல்தான் அஸ்லான் ‌ஷா விமான நிலையத்துக்கு சிங்கப்பூரிலிருந்து தினந்தோறும் மூன்று விமானச் சேவைகளை வழங்கி வருகிறது. மற்ற நாடுகளிலிருந்தும் பல்வேறு விமானச் சேவைகளை ஈர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கின்றனர் என்று தாம் நம்புவதாக திரு சரானி குறிப்பிட்டார்.

சுல்தான் அஸ்லான் ‌ஷா விமான நிலையத்துக்கான விரிவுபடுத்தல் பணிகள் எப்போது நிறைவடையும் என்று திரு சரானியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், அப்பணிகள் மத்திய அரசாங்கத்தின்கீழ் வருவதால் திட்டத்துக்கு யார் ஆலோசகராக நியமிக்கப்படுவார் என்பதைப் பொறுத்திருக்கிறது என்று விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்