மலேசியாவில் இயங்கிய அனைத்துலக மோசடிக் கும்பல், 98 பேர் கைது

மலேசியாவில் இயங்கிய அனைத்துலக மோசடிக் கும்பல், 98 பேர் கைது

கம்போடியா, வியட்னாம் போன்ற நாடுகளில் இயங்கிய அனுபவம் கொண்ட அக்கும்பல், சிக்காமல் இருக்க அடிக்கடி நாடுகளை மாற்றும் முறையைக் கையாண்டுள்ளது.
படம்: பெர்னாமா

06 Oct 2026 - 3:47 pm

1 mins read

கோலாலம்பூர்: பகாங் மாநிலத்தில் உள்ள மூடப்பட்ட ஓய்வு விடுதியை மையமாகக்கொண்டு, 24 மணி நேரமும் இயங்கிவந்த அனைத்துலக மோசடி அழைப்பு மையம் ஒன்றை மலேசியக் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அதிரடியாக முறியடித்துள்ளனர்.

விடுதி உரிமையாளர் எனக் கருதப்படும் மலேசியர் ஒருவர் உட்பட 20 முதல் 75 வயதுக்குட்பட்ட மூன்று மலேசியர்கள், 95 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலானோர் சீன நாட்டவர்கள் என்று குடிநுழைவுத் தலைமை இயக்குநர் ஜக்காரியா ஷாபான் தெரிவித்தார்.

சுங்கை லெம்பிங்கின் சுங்கை அராங் சாலையில் அமைந்திருந்த அந்த ஒதுக்குப்புறமான இடத்தை மாதம் 30,000 ரிங்கிட் வாடகைக்கு எடுத்து கடந்த மூன்று மாதங்களாக அக்கும்பல் இயங்கிவந்துள்ளது.

அதிகாரிகளின் பார்வையில் படாமல் தப்பிக்க, ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக்கோள் இணைய வசதியைப் பயன்படுத்தியுள்ளதுடன் நடமாட்டங்களைக் கண்காணிக்க ஆட்களையும் அக்கும்பல் நியமித்திருந்தது. சோதனையின்போது 100 கைப்பேசிகள், 120 கணினிகள், 11 ஸ்டார்லிங்க் சாதனங்கள், சிம் அட்டைகள், 5,000 ரிங்கிட் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 2025ல் மூடப்பட்ட விடுதியை அவர்கள் தங்கள் மறைவிடமாகப் பயன்படுத்தியுள்ளனர்.

கம்போடியா, வியட்னாம் போன்ற நாடுகளில் இயங்கிய அனுபவம் கொண்ட அக்கும்பல், சிக்காமல் இருக்க அடிக்கடி நாடுகளை மாற்றும் முறையைக் கையாண்டுள்ளது.

கைதானவர்கள்மீது மலேசியக் குடிநுழைவுச் சட்டம், விதிமுறைகளின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாமோசடிகும்பல்கைது