சோல்: வடகொரியா 2027 அக்டோபரில் அனைத்துலக நெடுந்தொலைவோட்டப் போட்டியை (மாரத்தான்) நடத்தக்கூடும் என்று பெய்ஜிங்கைத் தளமாகக் கொண்ட ‘கொர்யோ டூர்ஸ்’ (Koryo Tours) பயண நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்போட்டிக்கான அதிகாரபூர்வப் பயண முகவராக அந்நிறுவனம் செயல்படுகிறது.
வடகொரியா ஏற்றுநடத்தும் ஆகப் பெரிய அனைத்துலக விளையாட்டுப் போட்டியான அது, 2026 ஏப்ரலில் பியோங்யாங்கில் நடைபெறவிருந்த நிலையில் காரணம் தெரிவிக்கப்படாமல் ரத்து செய்யப்பட்டது. 2027ஆம் ஆண்டுப் போட்டிக்கான அட்டவணை அக்டோபருக்கு மாற்றப்படுவதற்கான காரணமும் தெளிவாகத் தெரியவில்லை.
ஏற்பாட்டுக் குழுவினர் வழங்கிய தகவலின்படி, 2027 பியோங்யாங் அனைத்துலக நெடுந்தொலைவோட்டப் போட்டி அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக பயண நிறுவனம் தனது இணையத்தளத்தில் கூறியுள்ளது. அதிகாரபூர்வத் தேதி பின்னர் உறுதிசெய்யப்படும்.
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 2025 ஏப்ரலில் பியோங்யாங் அனைத்துலக மாரத்தான் போட்டியை நடத்தியது. அதில் பங்கேற்க 45 நாடுகளைச் சேர்ந்த தொழில்முறையற்ற ஓட்டப்பந்தய வீரர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
தற்போது தென்கொரிய, அமெரிக்க, மலேசியக் கடப்பிதழ்கள் வடகொரியப் பயணத்திற்குச் செல்லுபடியாகா. ஜப்பானியக் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் பங்கேற்பது குறித்துத் தகவல் இல்லை என கியோடோ செய்தி நிறுவனத்திடம் அப்பயண நிறுவனம் கூறியது.
2014 முதல் தொழில்முறையற்ற ஓட்டப்பந்தய வீரர்களுக்கு அனுமதி வழங்கும் இப்போட்டியில் 42.195 கி.மீ. முழு மாரத்தான், அரை மாரத்தான், 10 கி.மீ., 5 கி.மீ. ஓட்டங்கள் இடம்பெறுகின்றன. பெருந்தொற்றால் 2020 தொடக்கத்தில் வடகொரியா எல்லைகளை மூடுவதற்கு முன்பு இப்போட்டி ஆண்டுதோறும் நடைபெற்றது.
