வாஷிங்டன்: மத்திய கிழக்குப் போர் காரணமாக உலகளாவிய வளர்ச்சி குறையும் என்று அனைத்துலகப் பண நிதியம் முன்னுரைத்துள்ளது.
தற்போதைய போர்நிறுத்தம் பலவீனமானது என்று குறிப்பிட்ட நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜியார்ஜீவா, போரினால் ஏற்படும் தாக்கத்தின் விளைவுகள் குறித்து எச்சரித்தார்.
போர் முடிந்ததாகக் கருதும் சிறந்த சூழ்நிலையில்கூட உலகம் முந்தைய நிலைக்கு நேர்த்தியாகவும் தெளிவாகவும் திரும்புவதற்குச் சாத்தியமில்லை என்றார் அவர்.
“மிகவும் நம்பிக்கையான சூழ்நிலையை நிதியம் கருதினாலும், அதிகரித்துவரும் எரிசக்திச் செலவுகள், உள்கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள சேதம், விநியோகத் தடைகள், சந்தையில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையின்மை ஆகியவற்றால் வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட குறைவாகவே இருக்கும்,” என்றார் அவர்.
போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 50 பில்லியன் அமெரிக்க டாலர் (S$63.7 பில்லியன்) வரை உடனடி நிதியுதவி தேவைப்படும் என நிதியம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

