இலங்கைக்கு 700 மில்லியன் டாலர் கடன் தரும் அனைத்துலகப் பண நிதியம்

இலங்கைக்கு 700 மில்லியன் டாலர் கடன் தரும் அனைத்துலகப் பண நிதியம்

2 mins read
74279a78-8471-428f-a7cb-b24165ce9f5d
அனைத்துலகப் பண நிதியம் தரும் கடனில் எரிபொருள் மானியங்களை வழங்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி

கொழும்பு: இலங்கைக்கு மேலும் 700 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடனை வழங்க அனைத்துலகப் பண நிதியம் வியாழக்கிழமை (ஏப்ரல் 9) ஒப்புதல் அளித்துள்ளது.

நான்கு ஆண்டுகளில் வழங்கப்படும் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் தொகையின் ஆக அண்மைய தவணை இது.

2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளியல் நெருக்கடியிலிருந்தும் மத்திய கிழக்குப் போரால் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்தும் மீண்டுவருவதற்கான வழிகளை விரைவுபடுத்தும்படியும் நிதியம் இலங்கையிடம் அறிவுறுத்தியது.

அனைத்துலகப் பண நிதியம் வழங்கும் தொகை எரிசக்தி அதிகரிப்பால் ஏற்பட்ட செலவுகளை ஈடுகட்டுவது உள்ளிட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும்.

இலங்கை அரசாங்கம் 200 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான எரிபொருள் மானியங்களை வழங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஈரான் போரால் ஏற்பட்ட எரிசக்தித் தட்டுப்பாட்டால் இலங்கை அதன் எரிசக்திச் சில்லறை விற்பனை விலையை மூன்றில் ஒரு பங்கு அதிகரித்தது.

இலங்கையின் பொதுவான எரிசக்தி மானியங்களை நிராகரித்த நிதியம், சிறு பயனீட்டாளர்களுக்கு மானியங்கள் வழங்கப்படும் மின்சாரக் கட்டணத்தில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தியது.

மத்திய கிழக்குப் போரால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற நிதியம், அந்தப் போர் எரிசக்தி விலைகளை உயர்த்தியதுடன் சுற்றுப்பயணிகளுக்கான முக்கிய விமான நடுவத்தைப் பாதித்துள்ளது என்று தெரிவித்தது.

கடந்த ஆண்டு நவம்பரில் டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை, அனைத்துலகப் பண நிதியத்திடமிருந்து கிட்டத்தட்ட 340 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையைக் கடனாகப் பெறும் தருவாயில் இருந்தது.

இலங்கை இதுவரை கண்டிராத மோசமான அந்தப் புயலில் சிக்கி 641 பேர் மாண்டதுடன் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

இலங்கைக்கு ஏற்பட்ட உள்கட்டமைப்புச் சேதம் கிட்டத்தட்ட 4.1 பில்லியன் அமெரிக்க டாலர் என்று அனைத்துலக வங்கி மதிப்பிட்டது.

அந்நிலையில், பேரிடர் நிவாரண நிதியாக 206 மில்லியன் அமெரிக்க டாலரைக் கடனாக வழங்கும்படி இலங்கை அரசாங்கம் அனைத்துலகப் பண நிதியத்திடம் கோரியது.

அதற்குமுன் 2022ஆம் ஆண்டு இலங்கையின் பொருளியல் கடுமையான பொருளியல் மந்தநிலையால் 7.3 விழுக்காடு சுருங்கியது.

குறிப்புச் சொற்கள்