சோல்: தென்கொரியாவுக்குச் செல்வோர், பயணம் செய்வதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு வரை இணைய வருகை அட்டைகளை இப்போது சமர்ப்பிக்கலாம் என அந்நாட்டு அரசாங்கம் திங்கட்கிழமை (பிப்ரவரி 24) அறிவித்தது.
முன்னதாக, விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பயணிகள் தாள் வருகை அட்டைகளை நிரப்ப வேண்டியிருந்தது. குடிநுழைவு அதிகாரிகள் அவற்றை ஒவ்வொன்றாகச் சரிபார்க்கவும் வேண்டியிருந்தது.
விமான நிலையம் குடிநுழைவு முகப்புகளில் செயல்பாடுகளை வேகப்படுத்தவும் பயணிகளுக்கு வசதியை ஏற்படுத்தித் தரவும் இணைய வருகை அட்டைகளை அறிமுகம் செய்ய தென்கொரிய நீதித்துறை அமைச்சு முடிவெடுத்தது.
தென்கொரியாவுக்கு 90 நாள்கள் அல்லது அதற்குக் குறைவாக பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு வருகை அட்டைகளை நிரப்ப வேண்டும்.
புதிய முறையால் பயணிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்க, 2025 இறுதிவரை தாள், இணைய வருகை அட்டைகள் இரண்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.
இணைய வருகை அட்டையைச் சமர்ப்பித்து அடுத்த 72 மணி நேரத்திற்குள் தென்கொரியா சென்றடையாவிட்டால் அந்த அட்டை காலாவதியாகிவிடும்.

