கோலாலம்பூர்: இன, சமய புரிந்துணர்வை வலுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மலேசியத் தேசிய ஒற்றுமை அமைச்சர் ஏரன் அகோ டகாங் தெரிவித்துள்ளார்.
உணர்வுபூர்வமான பத்து விவகாரங்களைத் தேசிய ஒற்றுமை அமைச்சின் ஒற்றுமை விவகார நிர்வாகக் குழு அடையாளம் கண்டுள்ளதாக அவர் கூறினார்.
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து தற்போதுவரை நிலவும் அனைத்து உணர்வுபூர்வமான விவகாரங்களையும் மறுஆய்வு செய்ய அக்குழு தனது முதல் கூட்டத்தை நடத்தியது.
அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து விவகாரங்களுக்குமான தீர்வுப் பரிந்துரைகளை குழு சமர்ப்பித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
குறுகிய கால, நடுத்தர, நீண்டகாலத் தீர்வுகளும் அவற்றில் அடங்கும்.
பல்வேறு சமய, கலாசார, பாரம்பரியங்களை நன்கு புரிந்துகொள்ளவும் மக்களிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தவும் மடானி நல்லிணக்கத் திட்டத்தின்கீழ் பல நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுவதாக திரு அகோ கூறினார்.
உலக நல்லிணக்க தினம், அனைத்துலக சகிப்புத்தன்மை தினக் கொண்டாட்டம், நல்லிணக்கக் கலந்துரையாடல்கள், நல்லிணக்க அணிவகுப்பு, விழாக்கால விளம்பரங்கள் ஆகியவை அவற்றில் அடங்கும் என்றார் அவர்.
“மலேசியாவில் பல இன, சமய மக்கள் வாழ்கின்றனர். பல சமயங்கள், நம்பிக்கைகளைக் கொண்டவர்களாக மலேசியர்கள் உள்ளனர். இந்தத் தனித்துவத்தைச் சரியான முறையில் பாதுகாத்தால் மலேசியாவின் தேசிய அடையாளத்தை வடிவமைக்கத் தேவையான வலிமைமிக்க அடித்தளமாக அது திகழும்,” என்று திரு அகோ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சமயங்கள் தொடர்பான அம்சங்கள் குறித்து அரசாங்க அமைப்புகளுக்கு குறிப்பிட்ட வழிகாட்டி நெறிமுறைகள் இல்லை என்பதை திரு அகோ சுட்டினார்.
நாட்டு மக்களின் பல்வேறு கலாசாரங்கள், பாரம்பரியங்கள், விழாக்கள், மரபுடைமை ஆகியவற்றைக் கொண்டாடும் அதே வேளையில் மலேசியர்களிடையே உள்ள சமூக இடைவெளிகளை எதிர்கொள்ளத் திட்டம் அடிப்படையிலான அணுகுமுறையை தமது அமைச்சு கடைப்பிடிப்பதாகத் திரு அகோ தெரிவித்தார்.


