புத்ராஜெயா: மலேசியாவில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ‘மைகாட்’ (MyKad) என்ற தேசிய அடையாள அட்டையும் புதிதாக வடிவமைக்கப்பட்ட கடப்பிதழும் அறிமுகப்படுத்தப்படும் என அந்நாட்டு உள்துறை அமைச்சர் சைஃபுதின் நசுடியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மேலும், விசா இன்றி மற்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் வசதியைப் பொறுத்தவரை, உலகின் மூன்றாவது நம்பகமான கடப்பிதழைக் கொண்ட நாடாக மலேசியா உள்ளது என்றார் அவர்.
அந்த நிலைப்பாட்டையும் நம்பிக்கையையும் தக்கவைத்துக்கொள்ள புதுப்பிப்புப் பணிகளை மேற்கொள்வது அவசியம் என்றும் அவர் கூறினார்.
வியாழக்கிழமை (ஜனவரி 8), புத்ராஜெயாவில் இருக்கும் தேவான் டி’ செரி எண்டோன் மண்டபத்தில் தமது புத்தாண்டுக்கான உரையை நிகழ்த்தியபிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புதிய கடப்பிதழ்கள் நடைமுறைக்கு வரும்போது, கடப்பிதழ் வைத்திருக்கும் மலேசியர்கள் உடனே அதனை மாற்ற முனையாமல், தங்கள் கடப்பிதழுக்கான புதுப்பிப்புத் தேதியின்படி அதனை மாற்றிக்கொள்ள வேண்டும் என அமைச்சர் இஸ்மாயில் வலியுறுத்தினார்.
அதேபோன்று மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன்கூடிய புதிய ‘மைகாட்’ அட்டை சுமுகமாகச் சுழற்சி முறையில் மாற்றப்படும் என அவர் குறிப்பிட்டார்.
“மைகாட் ஒரு பாதுகாப்பு ஆவணம். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மோசடியைத் தடுக்க தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப அதன் அம்சங்கள் மேம்படுத்தப்பட வேண்டும்,” என அவர் எடுத்துரைத்தார்.
அவ்விரு புதிய மாற்றங்களும் செயல்பாட்டுக்கு வரும் தேதி, புதுப்பிக்கப்பட்ட அம்சங்கள், கூடுதல் அறிவிப்புகள் பற்றிய விவரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றார் திரு சைஃபுதின் இஸ்மாயில்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், புதிய கடப்பிதழ், ‘மைகாட்’ அட்டைக்கான பயனர் விவரக்குறிப்புகள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டு சான்றளிக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றில் குடிநுழைவுத் துறைக்கும் தேசியப் பதிவுத் துறைக்கும் இடையிலான செயல்முறைகளும் அடங்கும் எனவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, ‘விசிட் மலேசியா 2026’ இயக்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, எல்லைக் கட்டுப்பாடு, குடிநுழைவு நடவடிக்கைகளை நாடு தழுவிய அளவில் மலேசிய அரசு வலுப்படுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

