ரோன்95 பெட்ரோல் விவகாரத்தின் தொடர்பில் பெட்ரோல் நிலையம் மீது விசாரணை

ரோன்95 பெட்ரோல் விவகாரத்தின் தொடர்பில் பெட்ரோல் நிலையம் மீது விசாரணை

2 mins read
93e0b0c6-caa5-4c24-ac7f-3bad6dc5b886
ஒரு கொள்கலனில் பெட்ரோல் நிரப்ப அனுமதித்ததாக, பெட்ரோல் நிலைய நிர்வாகத்திற்கு அமைச்சின் அமலாக்கக் குழு எச்சரிக்கை விடுத்தது. - படம்: மலாய் மெயில்

ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவின் முத்தியாரா ரினி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம், மானிய விலையுள்ள ரோன்95 பெட்ரோலை இருவர் நேரடியாகத் தங்கள் வாகனத்தில் நிரப்புவதற்குப் பதிலாக, ஒரு கொள்கலனில் நிரப்ப அனுமதித்ததாகக் கூறப்படுவது குறித்து ஜோகூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு விசாரித்து வருகிறது.

அதன் இயக்குநர் லிலிஸ் சஸ்லிண்டா போர்னோமோ, புலனாய்வாளர்கள் பெட்ரோல் நிலையத்தின் கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்வார்கள் என்றும், சரிபார்ப்பு நோக்கங்களுக்காக பரிவர்த்தனைப் பதிவுகளையும் கொள்முதல் ரசீதுகளையும் ஆராய்வார்கள் என்றும் கூறினார்.

“ரோன்95 பெட்ரோல் கொள்முதல் தொடர்பான இரண்டு பரிவர்த்தனைகளை நாங்கள் கண்டறிந்தோம். அதில் ஒன்று வாகனத்தின் எரிபொருள் தொட்டியில் நிரப்பப்பட்டது. மற்றொன்று மலேசிய விநியோகக் கட்டுப்பாட்டாளரால் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறிய அளவில், வாகனத்தின் பின்புறத்தில் இருந்த ஒரு பிளாஸ்டிக் கொள்கலனில் நிரப்பப்பட்டிருந்தது.

“ஆய்வின்போது, ​​இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக, விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவதன் முக்கியத்துவம் மற்றும் கண்காணிப்பை அதிகரிப்பதன் அவசியம் குறித்து பெட்ரோல் நிலைய நிர்வாகத்திற்கு அமைச்சின் அமலாக்கக் குழு எச்சரிக்கை விடுத்தது.

“மேலும், வாகன உரிமையாளரைக் கண்டுபிடித்து, மேலதிக விசாரணைக்காக அவரை வரவழைப்பதன் மூலம் ஜோகூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்,” என்று அவர் ஒரு ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக ஒரு மில்லியன் ரிங்கிட் அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தொடர்ச்சியான குற்றங்களுக்கு, அபராதம் மூன்று மில்லியன் ரிங்கிட் வரை உயர்த்தப்படலாம், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். ஜோகூர் பதிவு எண் கொண்ட ஒரு காரின் பின்புறத்தில், இருவர் ஒரு கொள்கலனை நிரப்புவதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

அனுமதியின்றி கொள்கலன்கள் அல்லது தொட்டிகளைப் பயன்படுத்தி மானிய விலை பெட்ரோல் அல்லது டீசல் வாங்குவது சட்டத்திற்குப் புறம்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்