ஊழலுடன் தென்கொரிய அதிபரைத் தொடர்புபடுத்தும் பதிவுகள் பற்றி விசாரணை

ஊழலுடன் தென்கொரிய அதிபரைத் தொடர்புபடுத்தும் பதிவுகள் பற்றி விசாரணை

2 mins read
63161bac-2592-468a-b2b0-196bab6c042e
மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங்கிற்கும் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் ஊழல் விவகாரத்திற்கும் இடையில் உள்ள தொடர்பை விசாரிக்குமாறு தென்கொரிய ஆளுங்கட்சியான ஜனநாயகக் கட்சி வலியுறுத்தி உள்ளது.

எப்ஸ்டீன் விவகாரத்தில் அதிபர் லீக்குத் தொடர்பு இருப்பதாக இணையத்தில் வெளியான தகவல்களைத் தொடர்ந்து ஆளுங்கட்சி அந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) காவல்துறையில் முறைப்படி புகார் அளிக்க அக்கட்சித் திட்டமிட்டுள்ளதாக ‘கொரியா ஹெரால்ட்’ இணையச் செய்தி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் கட்சியைப் பிரதிநிதித்து கிம் டோங்-ஆஹ் பேசினார்.

“அதிபர் தொடர்பான விவகாரம் கருத்துச் சுதந்திரம் அல்ல. மற்றொருவரின் வாழ்க்கையை நசுக்கி பணம் சம்பாதிக்க ‘லாப நோக்கத்துடன் நிறைவேற்றப்படும் வன்முறை’ என்பதைத் தவிர வேறில்லை,” என்றார் அவர்.

திரு கிம், ஜனநாயகக் கட்சியின் பொய்த்தகவல் தடுப்புப் பிரிவு துணைத் தலைவர் ஆவார்.

“அரசியல் ரீதியாக ஊக்குவிக்கப்படும் இதுபோன்ற குற்றங்களை கட்சி பொறுத்துக்கொள்ளாது. நாட்டின் தலைவரின் கௌரவத்தையும் நாட்டின் கண்ணியத்தையும் பாதிக்கக்கூடியவை அத்தகைய குற்றங்கள்,” என்றார் அவர்.

ஊழலுடன் கொரியாவின் இதர தனிப்பட்டவர்களையும் நிறுவனங்களையும் அதிபர் லீயுடன் தொடர்புப்படுத்தி இணையத்தில் பதிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து செய்தியாளர் கூட்டத்திற்கு ஆளுங்கட்சி ஏற்பாடு செய்தது.

குறிப்பாக, எப்ஸ்டீன் ஊழலுக்கும் தென்கொரிய அதிபருக்கும் தொடர்பு இருப்பதை மறைமுகமாகத் தெரிவிக்கும் காணொளி ஒன்றும் வெளியாகி உள்ளது.

“அடிப்படை ஆதாரங்கள் இன்றி இதுபோன்ற பதிவுகளும் காணொளிகளும் எவ்வாறு தயாரித்து, வெளியிடப்படுகின்றன என்பது கண்டறியப்பட வேண்டும். அவற்றின் பின்னணியில் இயங்குவது யார் என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும்,” என்று திரு கிம் கூறினார்.

இதுபோன்ற செய்திகளைப் பரப்புவதையே வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் நீதிக்குமுன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தென்கொரியாவில் ராணுவச் சட்டத்தை அறிவித்த விவகாரத்தில் அந்நாட்டின் அதிபருக்கும் பிரதமருக்கும் ஏற்கெனவே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்டதால் அதிபர் பதவியிலிருந்து யூன் சுக் யோல் விலகியதைத் தொடர்ந்து, 2025 ஜூன் 4ஆம் தேதி புதிய அதிபராக லீ ஜே மியுங் பதவி ஏற்றார்.

குறிப்புச் சொற்கள்