மலேசியாவில் 2026ன் முதல் ஒன்பது மாதங்களில் 350.4 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முதலீடுகள்

மலேசியாவில் 2026ன் முதல் ஒன்பது மாதங்களில் 350.4 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முதலீடுகள்

படம்: சவுத் சைனா மார்னிங் போஸ்ட்

17 Nov 2026 - 4:22 pm

2 mins read

கோலாலம்பூர்: 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சேவைகள், உற்பத்தி, முதன்மைத் துறைகளில் அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளில் மலேசியா 350.4 பில்லியன் ரிங்கிட்டைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 290.3 பில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்புநோக்க 20.7 விழுக்காடு அதிகம்.

மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் (மிடா) அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகள் 4,387 திட்டங்களை உள்ளடக்கியதாகக் கூறியது.

வெளிநாட்டு முதலீடுகள் 212.3 பில்லியன் ரிங்கிட் அல்லது மொத்த அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளில் 60.6 விழுக்காடு ஆகும். அமெரிக்கா, 60.0 பில்லியன் ரிங்கிட்டில் மிகப்பெரிய ஆதாரமாக உருவெடுத்துள்ளது. இது 2025ன் முதல் ஒன்பது மாதங்களில் பதிவு செய்யப்பட்ட 11.3 பில்லியன் ரிங்கிட்டை விட ஐந்து மடங்கு அதிகம்.

“இந்த ஒன்பது மாத காலத்திற்கான மொத்த முதலீடு, 2025ஆம் ஆண்டு முழுமைக்குமான திருத்தப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு இலக்கான 431.1 பில்லியன் ரிங்கிட்டில் 81.3 விழுக்காட்டைக் குறிக்கிறது. இந்தச் செயல்பாடு மலேசியாவில் முதலீட்டு வேகம் தொடர்ந்து நீடிப்பதைக் காட்டுகிறது” என்று ‘மிடா’ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு முதலீடுகள் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 40.7 விழுக்காடு அதிகரித்து 212.3 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளன. அதே சமயம், உள்நாட்டு முதலீடுகள் 138.1 பில்லியன் ரிங்கிட்டாகப் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட ஒரு விழுக்காடு குறைவாகும்.

“ஒட்டுமொத்த உள்நாட்டு முதலீடுகளில் சிறிய சரிவு காணப்பட்டாலும், உற்பத்தித் துறை 82.7 விழுக்காடு வலுவான வளர்ச்சியுடன் 37.8 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது. மேலும், முதன்மைத் துறையில் மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டு முதலீடுகள் 345.2 விழுக்காடு அதிகரித்து 13.9 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளன.

“இந்த வளர்ச்சி, உள்நாட்டுச் சேவைத் துறை முதலீடுகளில் ஏற்பட்ட சரிவை ஈடுகட்ட உதவியது. வெளிநாட்டு முதலீட்டு ஆதாரங்களில் அமெரிக்கா, 60.0 பில்லியன் ரிங்கிட்டுடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து சீனா (38.6 பில்லியன் ரிங்கிட்), சிங்கப்பூர் (38.5 பில்லியன் ரிங்கிட்), ஜப்பான் (24.4 பில்லியன் ரிங்கிட்), ஆஸ்திரேலியா (12.6 பில்லியன் ரிங்கிட்) ஆகிய நாடுகள் உள்ளன,” என்று ‘மிடா’ தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்