காவல்துறைக்கு இரண்டு மாத அவகாசம் அளித்த ஈப்போ உயர் நீதிமன்றம்

காவல்துறைக்கு இரண்டு மாத அவகாசம் அளித்த ஈப்போ உயர் நீதிமன்றம்

இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் குறித்த முக்கிய தகவல்களைப் பெற உத்தரவு
கோப்புப் படம்: மலாய் மெயில்

06 Apr 2026 - 5:22 pm

2 mins read

ஈப்போ: பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு எம். இந்திரா காந்தியின் இளைய மகள் பிரசன்னா திக்சாவுடன் தலைமறைவான அவரது முன்னாள் கணவர் முகமது ரிதுவான் அப்துல்லா தொடர்பான முக்கிய தகவல்களைப் பெறுவதற்கு, ஈப்போ உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு மேலும் இரண்டு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.

நீதிபதி நோர்ஷரிதா அவாங், அடுத்த நீதித்துறைக் கண்காணிப்பு விசாரணை ஜூன் 25ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தார்.

“அதற்குள் எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்குப் பதில்கள் கிடைப்பதை உறுதிசெய்யுங்கள்,” என்று அவர் திங்கட்கிழமை (ஏப்ரல் 6) அறிவுறுத்தினார்.

ஆவணச் சான்றுகளையும் முகமையின் பதில்களையும் விரிவாக ஆய்வு செய்த இந்த விசாரணை, மீட்பு முயற்சிகள் தொடர்பான தொடர்ச்சியான நீதித்துறைக்கண்காணிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

பிரசன்னாவுக்கு புதன்கிழமையன்று (ஏப்ரல் 8) 18 வயது நிறைவடைகிறது.

முன்னதாக, அரசு வழக்கறிஞர் சஃபிய்யா உமர் நீதிமன்றத்தில், கண்காணிப்புப் படக்கருவிக் காட்சிகளின் தடயவியல் பகுப்பாய்வு, சமயம் மாறுவதற்கு முன்பு கே. பத்மநாதன் என்று அறியப்பட்ட முகமது ரிதுவானின் நிதிப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

முக அடையாளம், வாகனப் பதிவெண்கள், பிற அடையாள அம்சங்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்களைத் தெளிவாகப் பிரித்தெடுக்க முடியாததால், முகமது ரிதுவான் பெட்ரோல் நிரப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான சிசிடிவி பதிவுகள் குறைந்த அளவிலான சாட்சிய மதிப்பையே கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.

நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ​​இந்திரா தமது பெருத்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். பல ஆண்டுப் பிரிவுக்குப் பிறகு, குறைந்தபட்சம் தனது மகளையாவது சந்திக்கலாம் என்று நம்பியிருந்ததாக அவர் சொன்னார்.

குழந்தையாக இருந்ததிலிருந்து தான் சந்திக்காத தன் குழந்தையைப் பார்க்கவும், கட்டித்தழுவவும் மட்டுமே விரும்புவதாக அவர் கூறினார்.

“என் மகளுக்கு 18 வயது ஆகிறது. ஒரு தாயாக எனது சட்டபூர்வ உரிமைகள் கணிசமாகக் குறைக்கப்படும்,” என்று மேலும் கூறிய அவர், 17 ஆண்டுக் காத்திருப்புக்குப் பிறகு ஏற்பட்ட இந்த நிலைமையை ஒரு பெரும் அநீதி என்றும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்