‘இக்பால்’ கடத்தல் கும்பல் முறியடிப்பு

2 mins read
91f45773-54ca-4f76-b630-ca68e1b06088
மலேசிய குடிநுழைவுத் துறை, ‘இக்பால்’ என்றழைக்கப்படும் கடத்தல் கும்பலை முறியடித்துள்ளது. - படம்: NSTP/ HARI ANGGARA.

கோலாலம்பூர்: மலேசியக் குடிநுழைவுத் துறை, சனிக்கிழமை (ஜனவரி 17) மேற்கொண்ட சோதனையில் ‘இக்பால்’ என்றழைக்கப்படும் கடத்தல் கும்பலைப் பிடித்துள்ளது. உளவுத் துறை, பொதுமக்களிடமிருந்து வந்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது. கிளந்தான் மாநில குடிநுழைவுத் துறை அமலாக்கப் பிரிவின் ஒத்துழைப்புடன், புத்ராஜெயாவில் உள்ள குடிநுழைவு தலைமையகத்தில் செயல்படும் ஆள்கடத்தல் தடுப்பு, குடியேறிகள் கடத்தல் தடுப்பு அமைப்பு மற்றும் வெளிநாட்டு தொழிலாளர் துஷ்பிரயோகம் அமைப்பு ஆகியவற்றின் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநரான ஸக்காரியா ஷாபான், சட்டவிரோதமான வழிகளில் நாட்டுக்குள் அழைத்து வரப்படும் குடியேறிகளைத் தற்காலிகமாகத் தங்க வைக்கப்படுவதற்குப் பயன்படுத்தப்படும் வீட்டை இலக்காகக் கொண்டு சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார். அதிகாரிகள் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக கிராமத்தில் உள்ள ஒரு வீடு தேர்ந்தெடுக்கப்பட்டது. கடத்தப்படும் ஆட்கள் இங்கு தற்காலிமாகத் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது என்று அவர் கூறினார். இந்தச் சோதனையில் 12 பங்ளாதேஷ் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் பெண். அனைவரும் 18 முதல் 54 வயது வரையிலானவர்கள். வீட்டின் பராமரிப்பாளராகச் செயல்பட்ட மியன்மாரைச் சேர்ந்த 27 வயது ரொஹிங்யா ஆடவரும் கைது செய்யப்பட்டார். “மலேசியா-தாய்லாந்து எல்லையில் முறைப்படுத்தப்படாத பாதை வழியாக குடியேறிகள் நுழைந்தததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அடுத்த இடத்திற்கு அனுப்புவதற்காக அவர்கள் தற்காலிகமாக இந்த வீட்டில் தங்க வைக்கப்படுகின்றனர்,” என்றார் ஸக்காரியா. கும்பல் நடவடிக்கைக்கு ஒத்துழைத்த வீட்டின் உரிமையாளர் தேடப்பட்டு வருகிறார். ‘இக்பால்’ கடத்தல் கும்பல் 2024ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து செயல்படுவதாக நம்பப்படுகிறது. பல நாடுகளில் உள்ள முகவர்களுடன் அது செயல்பட்டது. ‘இக்பால்’ என்று அழைக்கப்படும் கும்பலின் தலைவர் தாய்லாந்திலிருந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு குடியேறிகளிடமும் 10,000 முதல் 15,000 ரிங்கிட் வரை கும்பல் வசூலித்தது. இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளில் குடியேறிகளிடமிருந்து 1.5 மில்லியன் ரிங்கிட் வருமானத்தை கும்பல் ஈட்டியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடத்தப்பட்டவர்களை அடையாளம் காண முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. "ஆவணமில்லாமல் குடியேறிகளை வேலைக்கு அமர்த்தும், தங்க வைக்கும் எந்தவொரு தனிநபர்கள், கும்பல்கள், முதலாளிகள் அல்லது சொத்து உரிமையாளர்கள் மீதும் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்று திரு ஸக்காரியா எச்சரித்தார்.

குறிப்புச் சொற்கள்