டெஹ்ரான்: ஈரானுக்கு எதிரான அமெரிக்கா - இஸ்ரேல் போரின் தொடக்க நாள்களில், ஈரானின் மூன்று குண்டுவீச்சு போர் விமானிகளைத் தங்கள் நாடு சிறைபிடித்துள்ளதாக ஈரான் சாட்டிய குற்றச்சாட்டை கத்தார் அதிகாரபூர்வமாக மறுத்துள்ளது.
ஈரானிய ஆயுதப்படையின் காணாமல் போனோர் தேடுதல் குழுவின் தளபதி ஜெனரல் சையத் முகம்மது பாக்கர்சாதே, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துக்கு எழுதிய கடிதத்தில் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மார்ச் மாதம் 2ஆம் தேதி நடந்த தாக்குதலின்போது ஈரானின் ‘Su-24’ ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அதிலிருந்து தப்பிய ஜவாத் சலேஹி, அப்துல்மஜித் தஷ்டியன், உம்ரான் பெஹ்ராவேஷியன் ஆகிய மூன்று விமானிகளையும் கத்தார் அதிகாரிகள் கைது செய்து வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மஜித் கஸேமி என்ற நான்காவது விமானி உயிரிழந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
எனினும், இக்கூற்றைக் கதார் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மாஜித் அல் அன்சாரி முற்றிலும் மறுத்துள்ளார். மத்திய கிழக்கில் பதற்றத்தைக் தணிப்பதற்கான தூதரக முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வரும் இந்தச் சூழலில், இத்தகைய தவறான தகவல்கள் வெளியாவது வியப்பளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
மார்ச் மாதத் தொடக்கத்தில் தங்கள் வான்வெளியை மீறி நுழைந்த ஈரானிய ‘Su-24’ போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதை ஒப்புக்கொண்ட அவர், தேடுதல் நடவடிக்கையின்போது கண்டெடுக்கப்பட்ட ஒரு விமானியின் உடலை ஈரானிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், மீட்புப் பணிகள் குறித்த விவரங்களை அறிய ஈரானியக் குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், அதற்கு ஈரானிடமிருந்து இதுவரை எவ்வித பதிலும் வரவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


