கைரோ/வாஷிங்டன்: ஈரான்மீதும், சீனா உட்பட அதன் முக்கிய வர்த்தக பங்காளிகள்மீதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புதிய அமெரிக்க பொருளாதாரத் தடைகள் திங்கள்கிழமை அறிவிக்கப்படவுள்ள நிலையில், அமெரிக்காவும் ஈரானும் முரணான கருத்துகளைப் பரிமாறிக் கொண்டுள்ளன.
போர் தொடங்கி ஆறு மாதங்களாகவிருக்கும் நிலையில் இரு தரப்பும் அமைதிப் பேச்சுவார்த்தைகளிலோ தாக்குதல்களிலோ ஈடுபடவில்லை.
இருப்பினும், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அங்கீகரிக்கப்படாத எண்ணெய் கப்பல்களைத் தாக்கப்போவதாக ஈரான் அச்சுறுத்திவருவதால் எண்ணெய் போக்குவரத்தும் அங்கு நிலைகுத்தியுள்ளது.
இதற்கிடையே, ஈரான்மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான தடைகளை விதிக்கப்போவதாகச் சூளுரைத்த அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸன்ட், திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் செய்தியாளர்களைச் சந்திக்கவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அமெரிக்காவுடன் ஒத்துழைக்குமாறு சீனாவையும் அவர் கேட்டுக்கொண்டார்.
‘கேப்லர்’ பகுப்பாய்வு நிறுவனத்தின் கடந்த ஆண்டு தரவுகளின்படி, ஈரான் ஏற்றுமதி செய்யும் எண்ணெய்யில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானவற்றை சீனா வாங்குகிறது. இந்நிலையில், சீனா, தூதரக ரீதியான பேச்சுவார்த்தையை நடத்தும்படி வலியுறுத்தியது.
அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை அறிவிக்கவிருப்பதாகக் கூறிய ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாள ர்இஸ்மாயில் பாகேய், அது, ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் ஒவ்வொரு சுதந்திர உறுப்புநாட்டின்மீதும் எல்லை கடந்த இறையாண்மையை அமெரிக்கா திணிக்க மேற்கொள்ளும் முயற்சி என்று கூறினார்.
“இத்தகைய இரண்டாம் கட்டத் தடைகளுக்கு அனைத்துலகச் சட்டத்தில் எந்த ஆதாரமும் இல்லை” என்று எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டார்.
ஈரானுக்கு எந்த வகையிலாவது ஆதரவு அளிக்கும் நாடுகள் பொருளியல் ரீதியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து என்னவெல்லாம் நடக்கிறது என்பதை அமெரிக்கா உற்றுநோக்கி வருகிறது என்றார் அவர்.
“அவர்கள் ஓர் ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள விரும்புகிறார்கள். ஆனால் சரியான ஒப்பந்தத்தை செய்ய அவர்கள் இன்னும் தயாராக இல்லை,” என்று ஈரான் குறித்து டிரம்ப் கூறினார்.


