வியட்னாம் தற்காப்புக் கண்காட்சியில் கலந்துகொள்ளும் ஈரான், இஸ்ரேல்

2 mins read
4bd1627f-2dce-4394-bcac-b670a900326e
2022ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி வியட்னாமின் ஹனோயில் நடந்த வியட்னாம் அனைத்துலக தற்காப்புக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட தற்காப்புக் கருவிகளை மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

ஹனோய்: ஈரான், இஸ்ரேல், சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த தற்காப்புக் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் கருவிகளை வியட்னாம் தலைநகர் ஹனோயில் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தற்காப்புக் கண்காட்சியில் காட்சிப்படுத்த இருப்பதாக வியட்னாம் தற்காப்பு அமைச்சு செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 19) தெரிவித்தது.

டிசம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ள அந்தக் கண்காட்சியில் 27 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 200 நிறுவனங்கள் பங்கேற்க ஏற்கெனவே முகப்புகளை முன்பதிவு செய்துள்ளன என்று அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டு முதல் முறையாக வியட்னாமில் நடந்த அனைத்துலக தற்காப்புக் கண்காட்சியில் சீனா, ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஏவுகணைத் தாக்குதல், வான்வழித் தாக்குதல் ஆகியவற்றை நடத்திய இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தற்காப்புக் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களை இந்தக் கண்காட்சி ஒன்றிணைக்கும்.

ஈரான்மீது மேற்கத்திய நாடுகள் பொருளியல் தடை விதித்திருக்கும் சூழலில் அந்நாடு இக்கண்காட்சியில் கலந்துகொள்ள உள்ளது என்பது கூடுதல் தகவல்.

இக்கண்காட்சியில் பங்கேற்கவிருக்கும் நிறுவனங்களின் பட்டியலை வியட்னாம் தற்காப்பு அமைச்சு இன்னும் வெளியிடவில்லை. மேலும், காட்சிப்படுத்தப்படும் ஆயுதங்களின் வகைகள் குறித்தும் எந்த விவரமும் இல்லை.

கண்காட்சியின்போது மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களின் மாதிரிகளை மட்டுமே நிறுவனங்கள் காட்சிப்படுத்துகின்றன.

தொழில்நுட்ப இடமாற்றத்திற்கும் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளைப் பெறவும் வெளிநாட்டு பங்காளிகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அதன் வளர்ந்து வரும் உள்நாட்டுத் தொழில்துறையை அதிகரிக்கவும் வியட்னாம் அந்தக் கண்காட்சியைப் பயன்படுத்த விரும்புவதாக வியட்னாம் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த கண்காட்சியின்போது வியட்னாம் வெளிநாட்டுத் தற்காப்பு நிறுவனங்களுடன் ஐந்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகவும் இருப்பினும், அவற்றுக்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை எனவும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்