துபாய்: ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இஸ்ரேலிய ராணுவம் ஈரான் மீதும் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீதும் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும், ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியதிலிருந்து 2,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். போர் மேலும் ஒரு வாரம் தொடரும் வேளையில், பூசல் கூடுதல் பகுதிகளுக்குப் பரவக்கூடும் என்ற அச்சம் அமெரிக்கர்களிடையே நிலவுகிறது.
ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைகளைப் பாய்ச்சியதைத் தொடர்ந்து இஸ்ரேலிய ராணுவம், ஈரான் அரசாங்கத்தினர் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்து சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.
குவைத், சவூதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், ஈராக், பஹ்ரேன் ஆகிய நாடுகளிலும் இஸ்ரேலின் ஹைஃபா, டெல் அவிவ் ஆகிய நகரங்களிலும் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்புடைய 55க்கும் அதிகமான பகுதிகள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஈரான் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) இரவு கூறியது.
அமெரிக்க-பிரிட்டிஷ் கூட்டு ராணுவத் தளத்தை நோக்கி ஈரானிய ஏவுகணைகள்
இந்தியப் பெருங்கடலில் டியேகோ கார்சியா தீவில் உள்ள அமெரிக்க-பிரிட்டிஷ் கூட்டு ராணுவத் தளத்தை நோக்கி ஈரான் இரண்டு நெடுஞ்தொலைவு ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக வால் ஸ்திரீட் ஜர்னல் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
அவ்விரு ஏவுகணைகளும் குறி தப்பின.
அந்தக் கூட்டு ராணுவத் தளம், ஈரானிலிருந்து சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆகையால் இந்தத் தாக்குதல் முயற்சி, ஈரானின் ஏவுகணைகள் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக தூரம் செல்லக்கூடியவை என்பதை எடுத்துக்காட்டுவதாகக் கூறப்படுகிறது.
போரை படிப்படியாக நிறுத்த பரிசீலனை: டிரம்ப்
போர் மூன்று வாரங்களாகத் தொடரும் வேளையில் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளைப் படிப்படியாகக் குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்னதாகக் கூறியிருந்தார். அதேவேளையில் ஈரானுக்கு எதிரான போர் நிறுத்தத்தை அவர் நிராகரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறும் தறுவாயில் இருப்பதால் பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும். ஆனால் எதிர்த்தரப்பை அடியோடு ஒழிக்கும் வரை போர் நிறுத்தம் இருக்காது என்று திரு டிரம்ப் சொன்னார்.
ஹோர்முஸ் நீரிணைக் கப்பல் போக்குவரத்துப் பாதையைக் கண்காணிக்கும் பொறுப்பை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டால் அமெரிக்கா உதவ முன்வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

