டெஹ்ரான்: போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் பின்னடைவைச் சந்தித்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எந்தவொரு கப்பலையும் குறிவைத்துத் வைத்துத் தாக்கவிருப்பதாக ஈரானிய ராணுவம் வியாழக்கிழமை (ஜூன் 11) தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா புதிதாகத் தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்தத் தகவல் வெளிவந்தது.
ஈரானியத் தரப்பு தங்களை ஏமாற்றப் பார்ப்பதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், அந்நாட்டைக் கடுமையாகத் தாக்கப்போவதாகச் சூளுரைத்திருந்தார்.
குவைத், பஹ்ரேனில் உள்ள விமானப் படைத்தளங்களில் உள்ள 18 அமெரிக்க ராணுவ வசதிகள்மீது தாங்கள் பதில் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரானிய ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது. அபாய எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டதாக பஹ்ரேனின் உள்துறை அமைச்சு கூறியது.
இருப்பினும், நீரிணை மூடப்பட்டுள்ளதாக ஈரான் கூறியதை அமெரிக்க ராணுவம், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் மறுத்துள்ளது, “வர்த்தகக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தொடர்ந்து பயணம் செய்து வருகின்றன,” என்று அது கூறியுள்ளது.
ஆனால், ஹோர்முஸ் நீரிணை வழியாக சட்டவிரோதமாகக் கடக்க முயன்ற இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டதாக ஈரானியக் கப்பற்படை குறிப்பிட்டுள்ளது.

