கத்தார் எரிபொருள் நடுவத்தைத் தாக்கியது ஈரான்

டெஹ்ரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

கத்தார் எரிபொருள் நடுவத்தைத் தாக்கியது ஈரான்

2 mins read
62738113-15ce-462a-8416-4ce6dae74750
ஈரானின் பெரிய எரிபொருள் கிடங்கு உள்ள பார்ஸ் பகுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தின (இடம்). சவூதி அரேபியாவில் தாக்குதல் நடத்திய ஈரான் (வலம்). - படங்கள்: சமூக ஊடகத் தளங்கள்
Google News Preferred Icon

துபாய்: அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாகத் தற்போது ஈரான் கத்தாரில் உள்ள எரிபொருள் நடுவத்தைத் தாக்கியுள்ளது. அதேபோல் சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய், எரிவாயு சேமிப்புக்கலன்களை ஈரான் தாக்கத் தொடங்கியுள்ளது.

கத்தாரின் எரிபொருள் நடுவமாக உள்ள ராஸ் லாஃபான் தொழிற்பேட்டையில் நடத்தப்பட்ட தாக்குதலில் கடுமையான சேதம் ஏற்பட்டதாகக் கத்தார் எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரியாத்தில் உள்ள எரிபொருள் கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் அனுப்பிய தொலைதூர ஏவுகணைகள் வானிலேயே அழிக்கப்பட்டன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சவூதி அரேபியா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதால் அதிகமாகப் பாதிக்கப்படவில்லை.

தற்போது ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எண்ணெய்க் கட்டமைப்புகளைக் குறிவைப்பதால் நிலைமை மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் உலக அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படக்கூடும்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் இது அரசியல்ரீதியில் நெருக்கடியைக் கொடுக்கக்கூடும். அமெரிக்காவில் டீசல் விலை ஒரு கேலனுக்கு 5 வெள்ளிக்கும் மேல் உயரத் தொடங்கியுள்ளது.

டிரம்ப் எச்சரிக்கை

இந்நிலையில், கத்தார்மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய்க் கிடங்குகளின்மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே ஈரானின் பெரிய எரிபொருள் கிடங்கு உள்ள பார்ஸ் பகுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் புதன்கிழமை (மார்ச் 18) தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கியது.

உலகில் அதிக அளவில் இயற்கை ஏரியாவு கிடைக்கும் பகுதியாக பார்ஸ் உள்ளது. அங்குத் தாக்குதல் நடத்தியதற்குக் கத்தார் இஸ்ரேலைக் குறைகூறியது. பார்ஸ் பகுதியில் கத்தாருக்குச் சொந்தமான இடங்களும் உள்ளன. அவற்றில் அதிக அளவில் இயற்கை எரிவாயு உள்ளது.

“இஸ்ரேலின் நடவடிக்கை ஆபத்தானது, பொறுப்பற்றது. இதனால் உலகின் எரிபொருள் சந்தை பாதிப்படையும்,” என்று கத்தார் கூறியது. ஐக்கிய அரபுச் சிற்றரசுகளும் இஸ்ரேலைக் கண்டித்தது.

குறிப்புச் சொற்கள்
ஈரான்சவூதி அரேபியாகத்தார்