வாஷிங்டன்: ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளை அண்மைய நிகழ்வுகள் சிக்கலாக்கியுள்ளன.
ஹோர்முஸ் நீரிணையை நோக்கி ஈரான் ஏவிய ஆளில்லா வானூர்திகளைச் சுட்டு வீழ்த்திய பிறகு, சனிக்கிழமை (ஜூன் 6) ஈரானியக் கடலோர ரேடார் கண்காணிப்புத் தளங்கள்மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரான் ஏவிய நான்கு வானூர்திகளும் வட்டாரக் கடல்வழிப் போக்குவரத்தைக் குறிவைத்ததாக அமெரிக்க ராணுவம் நம்புகிறது என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
அதையடுத்து, ஹோர்முஸ் நீரிணையில் அமைந்திருக்கும் கொருக், கெஷ்ம் தீவு ஆகியவற்றில் உள்ள ஈரானியக் கண்காணிப்புத் தளங்கள்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஏப்ரல் 8ல் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஈரானின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இதுபோன்ற தொடர்ச்சியான மீறல்கள் பதற்றத்தைக் குறைக்கும் எண்ணம் வாஷிங்டனுக்கு இல்லை என்பதையே காட்டுவதாகவும் அது கூறியது.
அமெரிக்காவின் சட்டவிரோத நடவடிக்கைகளின் விளைவுகளுக்கும், மேலும் ஏற்படும் எந்தவொரு பதற்றத்திற்கும் அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டும் என்று அது எச்சரித்தது.
அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, குவைத் மற்றும் பஹ்ரேனில் உள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்ததாகவும், தனது அனுமதியின்றி நீரிணையைக் கடக்க முயன்ற நான்கு எண்ணெய்க் கப்பல்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
குடியிருப்புப் பகுதிகளைக் கடந்து வந்த ஏழு ஏவுகணைகளை இடைமறித்ததில், பொருட்சேதம் ஏற்பட்டதாகவும் ஆனால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்றும் குவைத் ராணுவம் சனிக்கிழமையன்று கூறியது. பஹ்ரேனில், எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டு, குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
குவைத்தும் பஹ்ரேனும் இத்தாக்குதல்களைக் கண்டித்தன. இரு நாடுகளிலும் உள்ள அமெரிக்கத் தளங்களை ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகள் மூலம் தாக்கியதாக ஈரான் பின்னர் கூறியது; ஆனால் ஆறு ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும் ஏழாவது ஏவுகணை அதன் இலக்கை அடையவில்லை என்றும் அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.
மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்கான இடைக்கால ஒப்பந்தம் தொடர்பில் அமெரிக்காவும் ஈரானும் பெரும்பாலும் மறைமுகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும் ஈரானின் அணுசக்தித் திட்டம் உள்ளிட்ட சில சிக்கல்கள் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளில் ஆராயப்படும்.
ஆனால், இரு தரப்பினரும் அவ்வப்போது மோதல்களில் ஈடுபட்டு வருவதால், முறையான ஒப்பந்தத்தை எட்டுவது கடினமாகவே இருந்து வருகிறது.

