டெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மிரட்டலைக் கண்டுகொள்ளாது, குவைத்திலுள்ள ராணுவத் தளங்கள்மீது வியாழக்கிழமை (செப்டம்பர் 3) ஈரான் தாக்குதல் நடத்தியது.
முன்னதாக, ஈரானைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலில் குறைந்தபட்சம் 19 ஈரானியர்கள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, ‘தாங்கள் விரும்பும் எந்த நேரத்திலும்’ ஈரான்மீது தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் குவைத், ஜோர்தான், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், பஹ்ரேன், ஈராக்கிலுள்ள தன்னாட்சி பெற்ற குர்திஸ்தான் வட்டாரம் ஆகிய பகுதிகளிலுள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் தாக்கியது.
ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அதே வேளையில், அமெரிக்காவும் ஈரானியத் துறைமுகங்கள் மீதான முற்றுகையைத் தீவிரப்படுத்தி வருகிறது.
போரில் ஈரான் ஒரு ‘புதிய உத்தியை’ கையாண்டு வருகிறது என்றும் அது அமெரிக்காவின் ‘அடித்தளத்தையே தகர்க்கும்’ என்றும் ஈரானியப் பாதுகாப்புத் துறை தலைவர் மொஹ்சென் ரெஸாயி எச்சரித்துள்ளார்.
ஈரானிய மக்களுக்கு எதிராக அமெரிக்கா இழைத்த குற்றங்களுக்குப் பதிலடியாகவே வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களுக்குக் குறிவைக்கப்படுகிறது என்பதை ஈரானிய அரசுத் தொலைக்காட்சி உறுதிப்படுத்தியது.
இதனிடையே, ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் இடைமறித்து அழிப்பதாகக் குவைத் ராணுவம் தெரிவித்தது.
அப்பாவி மக்கள் உயிரிழப்பு குறித்து ஐநா கவலை
இதனிடையே, ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதலால் அப்பாவி மக்கள் உயிரிழப்பு அதிகரித்து வருவது குறித்து ஐக்கிய நாடுகள் மன்றம் கவலை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 1ஆம் தேதி இரவு ஈரான்மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டதாகவும் 108 பேர் காயமடைந்ததாகவும் ஈரானிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணைக் கடலோரப் பகுதிக்கு அருகே நடந்த திருமண நிகழ்வின்போது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர் என்றும் 67 பேர் காயமடைந்தனர் என்றும் ஈரானிய செம்பிறைச் சங்கம் தெரிவித்தது.
இதனையடுத்து, பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மிகுந்த கவலை தெரிவித்துள்ளார்.
உடனடி போர் நிறுத்தத்திற்கும் எல்லாத் தரப்பினரும் அனைத்துலக மனிதநேயச் சட்டங்களை மதித்துச் செயல்படவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


