2026ல் 18 ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்

2026ல் 18 ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்

2 mins read
9124cb86-4c10-4bf2-9be5-3fc4857eb590
கடந்த ஜனவரி மாத ஆர்ப்பாட்டங்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் பிப்ரவரியில் அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் மூண்ட போருக்குப் பிறகு, ஈரானிய அரசாங்கம் தனது ஒடுக்குமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக ஐநா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் வருத்தம் தெரிவித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

டெஹ்ரான்: 2026ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை தேசியப் பாதுகாப்பைக் காரணம் காட்டி 18 ஆர்ப்பாட்டக்காரர்கள் உட்பட குறைந்தது 40 பேருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் திங்கட்கிழமையன்று (ஜூன் 15) தெரிவித்துள்ளது.

போர் மற்றும் கொடூரமான ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் சிக்கியுள்ள ஈரானிய மக்களுக்காகத் தாம் பெரிதும் வருந்துவதாக ஐநா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க், ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் தெரிவித்தார்.

உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானில்தான் ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் குறிப்பிடுகின்றன.

கடந்த ஜனவரி மாத ஆர்ப்பாட்டங்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் பிப்ரவரியில் அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் மூண்ட போருக்குப் பிறகு, ஈரானிய அரசாங்கம் தனது ஒடுக்குமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக டர்க் வருத்தம் தெரிவித்தார்.

அதே வேளையில், ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 14) அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட அமைதி உடன்பாட்டை வரவேற்ற அவர், அனைத்துத் தரப்பினரும் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடித்து, இந்த உடன்பாட்டை விரைவாகவும் முழு நம்பிக்கையுடனும் செயல்படுத்த உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த மோதலானது மத்திய கிழக்கிலும் உலகளவிலும் மனித உரிமைகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். கடந்த ஜனவரியில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று, ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கிய பிறகும், ஈரானிய அதிகாரிகள் தங்களின் கொடூரமான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி, ஆயிரக்கணக்கானோரைக் கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய அரசாங்கம் இந்த ஆர்ப்பாட்டங்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவு பெற்ற கலவரங்களாகச் சித்திரித்ததோடு, வன்முறையில் ஏறத்தாழ 3,000 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது. எனினும், வெளிநாட்டு மனித உரிமை அமைப்புகள், பாதுகாப்புப் படையினரே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டி, பலி எண்ணிக்கை இதைவிட அதிகம் என்று கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்
மரண தண்டனைஈரான்ஆர்ப்பாட்டம்