ஈரானுடன் தொடரும் பூசல்; மேலும் ஒரு அமெரிக்க வீரர் கொல்லப்பட்டார்

ஈரானுடன் தொடரும் பூசல்; மேலும் ஒரு அமெரிக்க வீரர் கொல்லப்பட்டார்

2 mins read
c900cc08-6812-4573-9460-a73cdc37f53d
கடந்த சனிக்கிழமை (ஜூலை 18) எடுக்கப்பட்ட இப்படத்தில் தென் ஈரானின் அமெரிக்கத் தாக்குதலால் பெரிதும் சேதமடைந்த பாலம் ஒன்று தெரிகிறது. - படம்: ஏஎஃப்பி

கெய்ரோ: அமெரிக்கப் படைகள் தொடர்ந்து ஒன்பதாவது நாளாக ஈரான்மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றன.

இருதரப்புக்கும் இடையிலான தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. போர் மீண்டும் தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

சண்டை மீண்டும் தொடங்கியதையடுத்து ஹோர்முஸ் நீரிணைவழி கப்பல்கள் போக்குவரத்து தொடர்பில் கவலைகள் எழுந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணையில் உள்ள முக்கியக் கப்பல் பாதைகளில் வணிகக் கப்பல்கள்மீதான ஈரானின் தாக்குதலைத் தடுக்கும்வகையில், தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய தளபத்தியமான சென்ட்காம் கூறியது.

எனினும், தாக்குதல் குறித்த மேல்விவரங்களை அது வழங்கவில்லை. திங்கட்கிழமை (ஜூலை 20) காலை அமெரிக்க ஏவுகணைகள் பல ஈரானிய நகரங்களைத் தாக்கியதாக ஈரானியச் செய்தி நிறுவனமான டாஸ்மின் தெரிவித்தது.

வட ஈராக்கில் கொல்லப்பட்ட வீரர்

வட ஈராக்கில் தங்களின் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் ஞாயிற்றுக்கிழமை கூறியது. அப்பகுதியில் அமெரிக்க ராணுவத் தளங்கள் இருக்கின்றன.

முன்னதாகக் கடந்த வார இறுதியில் ஜோர்தானில் தங்களின் வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் ஒருவரைக் காணவில்லை என்றும் அமெரிக்க ராணுவம் தெரிவித்திருந்தது. வெள்ளிக்கிழமை (ஜூலை 17) நடந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட பகுதியில் அடையாளம் காணப்படாத உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், உயிரிழந்தவரை அடையாளம் காண சோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் சென்ட்காம் குறிப்பிட்டது.

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 17 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 420க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

ஈரான் பதிலடி

அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக மத்திய கிழக்கு வட்டாரத்தில் உள்ள அமெரிக்கப் பங்காளி நாடுகள்மீது ஈரான் தாக்குதல் நடத்திவருகிறது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக தனது கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை தாக்கப்பட்டதாக குவைத் கூறியது. அது, பொதுமக்களுக்கான முக்கிய உள்கட்டமைப்புமீது குறிவைக்கப்பட்ட தாக்குதல் என்று குவைத் கூறியது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே சண்டை மீண்டும் தொடங்கியதையடுத்து எண்ணெய் விலை ஏற்றம் கண்டுவருகிறது. அந்த வகையில், திங்கட்கிழமை எண்ணெய் விலை மூன்று விழுக்காடு கூடியது.

குறிப்புச் சொற்கள்
உலகம்அமெரிக்காஈரான்தாக்குதல்மரணம்