அமெரிக்க அமைதித் திட்டம் பரிசீலிக்கப்படுகிறது: ஈரான்

அமெரிக்க அமைதித் திட்டம் பரிசீலிக்கப்படுகிறது: ஈரான்

2 mins read
போர் விரைவில் முடிவுக்குவரும் என்கிறார் டிரம்ப்
5924aa04-0fbc-437f-b78f-1da02596bb2e
ஈரானிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பகேயி. - படம்: ராய்ட்டர்ஸ்

டெஹ்ரான்: மத்திய கிழக்கில் நடந்துவரும் போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா பரிந்துரைக்கும் முன்னோடி அமைதித் திட்டத்தைப் பரிசீலிப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்கச் செய்தி நிறுவனமான ‘அக்சியோஸ்’, 14 முக்கிய அம்சங்களுடன் தயாராகியுள்ள அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஈரானுடன் நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் என்று அமெரிக்கா நம்புவதாக புதன்கிழமை (மே 6) செய்தி வெளியிட்டது.

ஈரானின் மூத்த அரசதந்திரிகளில் ஒருவரான இஸ்மாயில் பகேயி, அது அமெரிக்காவின் ‘விருப்பப்பட்டியல்’ என்று அந்த ஒப்பந்தத்தைப் பற்றிக் கருத்துரைத்தார்.

ஈரானிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளரான அவர், ஒப்பந்தம் ஈரானின் ஆட்சியாளர்களால் பரிசீலிக்கப்பட்டுப் பிறகு பாகிஸ்தானிடம் அதுபற்றித் தெரிவிக்கப்படும் என்று கூறினார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ள பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார், நடப்பில் உள்ள சண்டை நிறுத்தத்தை நிரந்தர அமைதிக்கான பாதையாக அமைக்க தமது நாடு பெருமுயற்சி எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில், ஈரானுடன் நல்ல முறையில் பேச்சுவார்த்தைகள் நடந்ததாகக் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.

அந்த ஒப்பந்தம், அணுசக்தி குறித்த ஆழமான எதிர்காலப் பேச்சுவார்த்தைகளுக்கு அடித்தளமாக அமையும் என்று அக்சியோஸ் செய்தி ஊடகம் கூறியது.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்

ஈரான்மீதான வர்த்தகத் தடைகளை அகற்றுதல், ஹோர்முஸ் நீரிணையைக் கப்பல் போக்குவரத்துக்குத் தடையின்றித் திறத்தல், அணுசக்திச் செறிவூட்டல் ஆகியவை ஒப்பந்தத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்