ஹோர்முஸ் முற்றுகையின் பொருளியல் பாதிப்பை ஈரான் தாங்கக்கூடும்

ஹோர்முஸ் முற்றுகையின் பொருளியல் பாதிப்பை ஈரான் தாங்கக்கூடும்

2 mins read
2553a7d6-9b34-4708-8eda-552d071a87a3
சண்டை நிறுத்த உடன்பாடு நடப்புக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் மோதல்கள் அவ்வப்போது நடக்கின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் பூசலைத் தணிப்பதற்கான முயற்சிகள் மெதுவடைந்து வருகின்றன.

அவ்விரு நாடுகளும் வெள்ளிக்கிழமை (மே 8) ஒன்றையொன்று தாக்கியதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையின் முற்றுகையை ஈரான் கிட்டத்தட்ட மேலும் சில மாதங்களுக்குச் சகிக்கக்கூடிய வல்லமை கொண்டிருப்பதாக அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வுத் துறை அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

நீரிணையின் இடைமறித்தலால் மேலும் நான்கு மாதங்களுக்கு ஈரான் கடும் பொருளியல் நெருக்கடியால் பாதிப்படையாது என்று இந்த விவகாரத்தை அறிந்த அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

வாஷிங்டன் போஸ்ட் அறிக்கை இந்தத் தகவலை முதன்முதலில் வெளியிட்டது. தற்காலச் சூழலில் பெரும் பொருளியல் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று மற்றொரு மூத்த அதிகாரி கூறினார்.

ஹோர்முஸ் நீரிணை வட்டாரத்திற்கான சண்டை நிறுத்த உடன்பாடு தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையிலும், அண்மைய சில நாள்களாகப் பூசல்கள் மூண்டு வருகின்றன. ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

போரை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரானின் பதில் இன்னும் வெளிவரவில்லை.

ஈரான் தனது பதில் குறித்து இன்னும் ஆராய்வதாக அதன் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஹோர்முஸ் நீரிணையில் ஈரானியப் படைகளுக்கும் அமெரிக்கக் கப்பல்களுக்கும் இடையே ஆங்காங்கே மேலும் சில மோதல்கள் நிகழ்ந்ததாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

நிலைமை சீரடைந்துவிட்டதாக ஈரானிய ராணுவ வட்டாரம் ஒன்றை மேற்கோள்காட்டி தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் பின்னர் குறிப்பிட்டது. ஆயினும், மேலும் மோதல்கள் ஏற்படக்கூடும் என்றும் அது எச்சரித்தது.

ஈரானியத் துறைமுகத்தில் நுழைய முயன்ற ஈரான் தொடர்புடைய இரண்டு கப்பல்களைத் தாக்கியதாக அமெரிக்க ராணுவம் கூறியது. அமெரிக்கப் போர் விமானம் ஒன்று அவற்றைத் தாக்கிப் பின்வாங்கச் செய்ததாகவும் அது குறிப்பிட்டது.

பிப்ரவரி 28 முதல் ஈரான் முழுவதும் அமெரிக்க-இஸ்ரேலியக் கூட்டு விமானத் தாக்குதல்களுடன் போர் தொடங்கியதிலிருந்து, நீரிணை வழியான ஈரானியரல்லாத கப்பல் போக்குவரத்தை அது பெருமளவில் முடக்கியுள்ளது. அமெரிக்கா கடந்த மாதம் ஈரானியக் கப்பல்களுக்குத் தடை விதித்தது.

நெருக்கடிக்கு ஆளாகியுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

“ஒவ்வொரு முறை அரசதந்திர ரீதியான தீர்வு முன்வைக்கப்படும்போதும், அமெரிக்கா பொறுப்பற்ற ராணுவ நடவடிக்கையையே தேர்வு செய்கிறது,” என்று வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

வியாழக்கிழமை பிற்பகுதியில் ஈரானிய வர்த்தகக் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்கக் கடற்படை நடத்திய தாக்குதலில் சிப்பந்தி  ஒருவர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும், நால்வரைக் காணவில்லை என்றும் ஈரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியைச் (Giorgia Meloni) சந்தித்த பின்னர் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ  ரூபியோ  நீரிணையை மீண்டும் திறப்பதற்கான வாஷிங்டனின் முயற்சிகளுக்கு இத்தாலியும் இதர நட்பு நாடுகளும் ஏன் ஆதரவளிக்கவில்லை என்று கேள்வியெழுப்பினார்.

குறிப்புச் சொற்கள்