ஈரான்: வேவுபார்த்த சந்தேகத்தின் பேரில் எட்டு பேர் கைது

2 mins read
011e8ded-b370-43b9-94a5-9d762d1259c4
இஸ்ரேலின் மோஸாட் எனும் புலனாய்வு, சிறப்புச் செயல்பாட்டு அமைப்புக்குத் தகவல் கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் எட்டுப் பேரை ஈரான் ராணுவம் கைதுசெய்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஈரான்: ஈரானின் முக்கிய தளங்கள் உட்பட மூத்த ராணுவ அதிகாரிகள் குறித்த தகவல்களை இஸ்ரேலின் மோஸாட் எனும் புலனாய்வு, சிறப்புச் செயல்பாட்டு அமைப்புக்குக் கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் எட்டுப் பேரை ஈரான் ராணுவம் கைதுசெய்துள்ளது.

ஜூன் மாதம் நடத்தப்பட்ட இஸ்ரேலின் ஆகாயத் தாக்குதல்களின்போது மோஸாட் உளவு அமைப்புக்கு அந்த முக்கிய தகவல்களைக் குற்றஞ்சாட்டப்பட்டோர் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

அந்தத் தாக்குதலில் ஈரானின் அணுவாயுதக் கட்டமைப்புகளை இஸ்ரேல் அழித்ததுடன் உயர் ராணுவத் தளபதிகளையும் கொன்றது.

ஈரான் பதிலடியாக இஸ்ரேலின் ராணுவத் தளங்கள், உள்கட்டமைப்புகள், நகரங்கள்மீது சராமாரியாக ஏவுகணைகளைப் பாய்ச்சியது. அதையடுத்து ஜூன் 22ஆம் தேதி ஈரானிய அணுவாயுதக் கட்டமைப்புகள்மீது அமெரிக்கா தாக்குதல் தொடுத்தது.

இதற்கிடையே கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மோஸாட் அமைப்பிடமிருந்து இணையம்வழி சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றதாக ஈரான் ராணுவம் குறிப்பிட்டது.

அவர்கள் அடுத்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன் வடகிழக்கு ஈரானில் பிடிபட்டதாக அது சொன்னது. அவர்களிடமிருந்து ஏவுகணைகள், வெடிகுண்டுகள், கண்ணிவெடிகள் ஆகியவற்றை செய்வதற்கான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இஸ்ரேலுடன் தொடர்ந்து 12 நாள் போரின்போது ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் ஈரானியக் காவல்துறை 21,000 சந்தேக நபர்களைக் கைதுசெய்ததாக ஈரானிய அரசு ஊடகம் கூறியது. எனினும் அந்தச் சந்தேக நபர்கள் எதற்காகக் கைதுசெய்யப்பட்டனர் என்பதை அரசு ஊடகம் குறிப்பிடவில்லை.

அண்மை மாதங்களில் இஸ்ரேலுக்குத் தகவல் அளித்ததாகச் சந்தேகிக்கப்படும் குறைந்தது எட்டு பேரின் மரண தண்டனையை ஈரான் நிறைவேற்றியது.

அவர்களில் ஒருவரான அணுவாயுத விஞ்ஞானி ரூஸ்பே வடி, ஆகஸ்ட் 9ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். அவர் இஸ்ரேலின் ஆகாயத் தாக்குதலின்போது கொல்லப்பட்ட மற்றொரு விஞ்ஞானி பற்றிய தகவலை இஸ்ரேலிடம் பகிர்ந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்