டெஹ்ரான்: இவ்வாண்டுத் தொடக்கத்தில் நடைபெற்ற போராட்டங்களின்போது காவல்துறை அதிகாரிகள் இருவரைக் கொன்ற வழக்குத் தொடர்பில் கைதான மூவருக்கு வியாழக்கிழமை (மார்ச் 19) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
அம்மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ததை அடுத்து, புனித நகரமான கோமில் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கொலை, இறைவனுக்கு எதிராகப் போர் தொடுத்தது (மொகரிபா), இஸ்ரேல், அமெரிக்காவிற்குச் சாதகமாகச் செயல்பட்டது போன்ற குற்றச்செயல்களில் அவர்கள் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டதாக ஈரானிய நீதித்துறை தெரிவித்தது.
கடந்த ஜனவரி 8ஆம் தேதி நடைபெற்ற போராட்டங்களின்போது, கத்திகளையும் பிற ஆயுதங்களையும் கொண்டு தாக்கியதில் காவல்துறை அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டதில் அம்மூவருக்கும் தொடர்பிருந்தது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
ஈரானில் இவ்வாண்டுத் தொடக்கத்தில் வெடித்த நாடு தழுவிய போராட்டங்கள் மிகக் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டன. அந்தப் போராட்டங்களுக்குப் பின்னால் இஸ்ரேல், அமெரிக்கா போன்ற எதிரி நாடுகளின் சதி இருப்பதாக ஈரானிய அதிகாரிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

