அழிவைச் சந்திப்பதற்கு முன் ஈரான் தனது கடைசி வாய்ப்பை எதிர்கொள்கிறது: டிரம்ப்

அழிவைச் சந்திப்பதற்கு முன் ஈரான் தனது கடைசி வாய்ப்பை எதிர்கொள்கிறது: டிரம்ப்

2 mins read
8bbbfbe0-60dd-4463-8972-a05841bdd481
ஆகஸ்ட் 3ஆம் தேதி, மத்திய டெஹ்ரானில் உள்ள எங்கெலாப் சதுக்கத்தில் அமெரிக்க எதிர்ப்பு விளம்பரப் பலகை ஒன்றைக் கடந்து செல்லும் ஈரானியப் பெண். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

வாஷிங்டன்: டெஹ்ரான் மறுத்தபோதிலும் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், அது அழிவைச் சந்திப்பதற்கு முன் ஒரு கடைசி வாய்ப்பை வழங்குவதாகவும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) கூறினார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், சவூதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், கத்தார் மற்றும் பிற நாடுகளின் வேண்டுகோளின் பேரில் ஈரானுடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர ஒப்புக்கொண்டதாகக் கூறினார்.

வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதை ஈரானின் வெளியுறவு அமைச்சு ஆகஸ்ட் 3ஆம் தேதி மறுத்தபோதிலும், அவை நடைபெறுவதாக டிரம்ப் வலியுறுத்தினார்.

“நாங்கள் இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

“ஒரு நல்ல ஆவணத்தில் கையெழுத்திட இதுவே அவர்களுக்குக் கடைசி வாய்ப்பு. அழிவைச் சந்திப்பதற்கு முன்பு, அவர்களுக்குக் கடைசி வாய்ப்பு அனைத்தையும் நான் வழங்க விரும்புகிறேன்,” என்று டிரம்ப் தெரிவித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தைகள், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்துவிடுவதில் கவனம் செலுத்துகின்றன. இது உண்மையாகவே நாளைக்குள் நடக்கக்கூடும் என்று டிரம்ப் கூறினார். மேலும், ஈரானை அணுவாயுதமற்ற நாடாக மாற்றுவதற்கு சிறிது காலம் ஆகலாம் என்றும் அவர் கூறினார்.

பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது திடீர்த் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து வாஷிங்டனும் டெஹ்ரானும் போரில் ஈடுபட்டுள்ளன.

இருப்பினும், பல மாதங்களாக அவ்வப்போது நடந்த அரசதந்திர முயற்சிகள், ஒப்பீட்டளவில் அமைதியான காலங்களுக்கு வழிவகுத்துள்ளன.

ஐந்து மாதங்களுக்கு மேலாகியும், ஈரான் அவ்வட்டாரத்தில் உள்ள அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளின் இலக்குகள் மீது ஏவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் ஏவும் திறனைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதுடன், தனது செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

வழக்கம்போல், டிரம்ப் கடந்த வாரம் ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கப்போவதாக அச்சுறுத்தினார். ஆனால் ஆகஸ்ட் 1ஆம் தேதி அதிலிருந்து பின்வாங்கியதுடன், ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு இன்னும் சாத்தியம் இருப்பதாகக் கூறினார்.

ஈரான், தனது பங்கிற்கு, தற்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளது.

“முக்கியமான எண்ணெய் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக ஓமானுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்,” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறினார்.

குறிப்புச் சொற்கள்
சவூதி அரேபியாவெளியுறவு அமைச்சுஈரான்