ஜெருசலம்: ஈரான் பேரழிவுக்கு உள்ளாகியிருப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வியாழக்கிழமை (மார்ச் 19) கூறியிருக்கிறார்.
ஈரானை இப்போது யார் வழிநடத்துவது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றார் அவர். வளைகுடா வட்டாரத்தில் உள்ள எண்ணெய், எரிவாயு வளங்களை ஈரான் தொடர்ந்து தாக்கிவரும் நிலையில், உலகச் சந்தைகள் ஆட்டங்கண்டுள்ளன.
யுரேனியத்தைச் செறிவூட்டவோ புவியீர்ப்பு ஏவுகணைகளைத் தயாரிக்கவோ தேவைப்படும் ஆற்றலை டெஹ்ரான் இழந்துவிட்டதாகத் திரு நெட்டன்யாகு தெரிவித்தார்.
“நாங்கள் வெற்றி பெறுகிறோம். ஈரான் அழிந்துவருகிறது,” என்று இஸ்ரேலியப் பிரதமர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் இணைந்து செயல்படுவது பற்றிப் பெருமிதம் அடைவதாக அவர் சொன்னார். பொதுமக்கள் நினைப்பதைக் காட்டிலும் போர் வெகு விரைவில் முடிவை நோக்கிச் செல்வதாகத் திரு நெட்டன்யாகு குறிப்பிட்டார்.
போரை எப்போது முடித்துக்கொள்வது என்பதற்கு எந்தக் காலவரம்பும் இல்லை என அமெரிக்கா கூறியுள்ள வேளையில், அவரின் கருத்து வந்துள்ளது.
ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வளத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேல் தனித்துச் செயல்பட்டதாகத் திரு நெட்டன்யாகு கூறினார். ஈரானின் உள்நாட்டு எரிவாயுத் தேவையில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு அங்கிருந்துதான் விநியோகிக்கப்படுகிறது.
அந்தத் தாக்குதல்பற்றி முன்கூட்டியே தமக்குத் தெரியாது என்று திரு டிரம்ப் கூறுகிறார்.

