டெஹ்ரான்: இஸ்ரேலுடனான போர்நிறுத்தத்துக்குத் தாங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானிய அரசாங்கத்துக்குச் சொந்தமான தொலைக்காட்சி செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) அதனைத் தெரிவித்ததாக நியூயார்க் டைம்ஸ் ஊடகம் கூறியுள்ளது. இருதரப்பும் போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்னதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த செய்தி வெளியாகியிருக்கிறது.
“எல்லாம் நடக்கவேண்டிய விதத்தில் நடக்கும் என்ற நம்பிக்கையில்... நிச்சயமாக நடக்கும்... 12 நாள் போர் என்றழைக்கப்படவேண்டிய இப்போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான துடிப்பு, தைரியம், புத்திகூர்மையைக் கொண்டுள்ள இஸ்ரேல், ஈரான் இருநாடுகளுக்கும் நான் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று திரு டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டார்.
முன்னதாகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் ஈரான் தன் மீது ஏவுகணைப் பாய்ச்சியதைத் தொடர்ந்து இஸ்ரேலில் அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
போர்நிறுத்தத்துக்கு ஈரான் ஒப்புக்கொண்டதாக ஈரானிய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போர்நிறுத்த ஒப்பந்தம் ஏதும் எட்டப்படவில்லை என்று டெஹ்ரான் சொன்னது.
போர்நிறுத்த ஒப்பந்தம் ஏதும் எட்டப்படவில்லை என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதற்கு சுமார் 15 நிமிடங்கள் கழித்து அவர், இஸ்ரேலின் பலவந்த நடவடிக்கைகளுக்கு எதிரான ஈரானிய ராணுவத்தின் பதில் நடவடிக்கைகள் கடைசி நிமிடம் வரை தொடர்ந்ததாகப் பதிவிட்டார்.
எனினும், ஈரானிய மக்களுக்கு எதிராக இஸ்ரேல் சட்டவிரோதமான முறையில் பலவந்தமாக நடந்துகொள்வதை நிறுத்திக்கொண்டால் ஈரான் அதன் தாக்குதல்களைத் தொடராது என்றும் அவர் சொன்னார்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரில் கடந்த வார இறுதியில் அமெரிக்காவும் சேர்ந்துகொண்டது. அணுவாயுதத்தைத் தயார்படுத்திக்கொள்ளும் விளிம்பில் டெஹ்ரான் இருப்பதாகக் குற்றஞ்சாட்டிய பிறகு இஸ்ரேல், ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்களை நடத்தியது.
தொடர்புடைய செய்திகள்
கத்தாரில் உள்ள அமெரிக்க ஆகாயப் படைத் தளத்தின் மீது ஈரான் தாக்குதல்
முன்னதாக, கத்தாரில் உள்ள அமெரிக்க ஆகாயப்படைத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைகளைப் பாய்ச்சியது. அந்தத் தாக்குதலில் யாரும் காயமடையவில்லை.
அந்தத் தாக்குதல், ஈரான் எடுத்த வலுவற்ற பதில் நடவடிக்கை என்று திரு டிரம்ப் விமர்சித்திருந்தார். போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ளுமாறு அவர் இஸ்ரேலையும் ஈரானையும் கேட்டுக்கொண்டார்.
கத்தாரின் அல் உடெய்ட் ஆகாயப் படைத் தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. அதனையடுத்து இஸ்ரேல்-ஈரான் போர் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் நிலவியது.
கடந்த வார இறுதியில் ஈரானின் நிலத்தடி அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கப் படைகள் 13,600 எடைகொண்ட பங்கர்-பஸ்டர் ரக குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தின. அதன் மூலம் ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் போரில் அமெரிக்காவும் பங்கேற்றது.
அதற்குப் பதில் நடவடிக்கை எடுக்கப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்தது. அதேநேரம், ஈரானிய அரசாங்கம் கவிழ்க்கப்படும் வாய்ப்பு இருப்பதாக திரு டிரம்ப் கூறியிருந்தார்.