டெஹ்ரான்: ஈரானுக்கு எதிராக எந்த ஒரு தாக்குதல் நடத்தப்பட்டாலும் அது போர் தொடுக்கப்பட்டிருப்பதற்குச் சமம் என்று ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) எச்சரிக்கை விடுத்தார்.
அடுத்த சில நாள்களில் அமெரிக்காவின் போர் விமானங்களை ஏந்தும் கப்பல் மத்திய கிழக்கை அடையவிருக்கும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“மத்திய கிழக்கில் அமெரிக்கா அதன் படைகளைக் குவித்து வருகிறது. ஈரானுக்கு எதிராகப் போரிடும் எண்ணம் அதற்கு இருக்கக்கூடாது. எங்கள் ராணுவம் எதற்கும் தயாராக உள்ளது. ஈரான் உயர் விழிப்புநிலையில் உள்ளது,” என்று பெயர் வெளியிட விரும்பாத அந்த மூத்த அதிகாரி கூறினார்.
“ஈரான் மீது எத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டாலும் அது எங்களுக்கு எதிரான முழுவீச்சிலான போராக எடுத்துக்கொள்ளப்படும். ஈரானின் இறையாண்மைக்கு எவ்வித மிரட்டல், பாதிப்பு ஏற்பட்டாலும் எதிரிப் படைகளுக்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்,” என்றார் அவர்.
அண்மையில் ஈரானிய அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தை முறியடிக்க ஈரானிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டபோது பலர் மாண்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொன்றாலோ அல்லது அணுசக்தித் திட்டத்தை மீண்டும் தொடங்கினாலோ ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வியாழக்கிழமை (ஜனவரி 22) கூறினார்.

