டெஹ்ரான்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் போர் தொடங்குவதற்கான சாத்தியமுள்ளதாக ஈரானின் மூத்த ராணுவ அதிகாரி முகமது ஜாபர் ஆசாதி சனிக்கிழமை (மே 2) கூறியுள்ளார்.
ஈரானின் புதிய அமைதித் திட்டப் பரிந்துரையை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிராகரித்த சில மணி நேரத்தில் ஈரான் இதனைத் தெரிவித்துள்ளது.
“அமெரிக்கா எந்த ஒரு ஒப்பந்தத்திற்கும் கட்டுப்படுவதில்லை; எனவே மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது,” என்று திரு முகமது ஜாபர் எச்சரித்தார்.
ஏப்ரல் 30ஆம் தேதி பாகிஸ்தான் வாயிலாக ஈரான் அளித்த அமைதித் திட்ட முன்வரைவு குறித்து அதிருப்தி வெளியிட்ட டிரம்ப், “ஈரான் தலைமையின் கருத்து வேறுபாடுகளே பேச்சுவார்த்தை முடங்கக் காரணம்,” எனச் சாடினார்.
பேச்சுவார்த்தையிலிருந்து ஈரான் ஒருபோதும் பின்வாங்கியதில்லை என்று அந்நாட்டின் நீதித்துறைத் தலைவர் கோலம்ஹோசைன் மொஹ்சேனி எஜேய் வெள்ளிக்கிழமை (மே 1) கூறினார். எனினும், அமைதிக்கான விதிமுறைகளைத் திணிப்பதை ஏற்கமுடியாது என்றார் அவர்
ஈரானின் அண்மைய பரிந்துரை குறித்த விவரங்களை வெள்ளை மாளிகை அளிக்க மறுத்துவிட்ட நிலையில், ஈரானின் அணுசக்தித் திட்டத்தை மீண்டும் விவாதத்திற்குக் கொண்டு வர அமெரிக்கா திட்டமிடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரி இறுதியில் தொடங்கிய ஈரான் போர் ஏப்ரல் 8 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
போரின் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால், உலகளாவிய எண்ணெய், எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை போர் காலத்திற்கு முந்தைய நிலையை விட 50 விழுக்காடு அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் பொருளியல் தடைகளால் ஈரானில் பணவீக்கம் 50 விழுக்காட்டைக் கடந்துள்ளதோடு, மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வளைகுடாப் பகுதியில் போர்நிறுத்தம் நீடித்தபோதும், லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, கத்தாருக்கு $4 பில்லியன் மதிப்பிலான ஏவுகணைகளையும், இஸ்ரேலுக்கு $1 பில்லியன் மதிப்பிலான ஆயுதங்களையும் வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

