டெல் அவிவ்: ஈரான் பல கட்டங்களாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளைப் பாய்ச்சி தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானிய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்ததாகக் கூறி, அந்நாட்டின் மின்கட்டமைப்பைத் தகர்க்கப்போவதாக விடுத்த எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தள்ளிவைத்த நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இந்த ஏவுகணைத் தாக்குதலால் டெல் அவிவ் உள்ளிட்ட இஸ்ரேலின் பல பகுதிகளில் விமானப் படை எச்சரிக்கை மணி ஒலித்தன. ஏவுகணைகளை இடைமறித்து அழித்தபோது ஏற்பட்ட வெடிப்புச் சத்தங்கள் டெல் அவிவ் நகரிலும் கேட்கப்பட்டன. வடஇஸ்ரேலில் ஏவுகணைச் சிதறல்கள் விழுந்ததில் வீடுகள் சேதமடைந்தன. எனினும், உயிரிழப்புகள் ஏதும் இதுவரை பதிவாகவில்லை.
அமெரிக்காவும் ஈரானும் மத்திய கிழக்கில் பகைமைப் போக்கை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து மிகச் சிறந்த, ஆக்கபூர்வமான உரையாடல்களை நடத்தியதாக டிரம்ப் திங்கட்கிழமையன்று (மார்ச் 23) தமது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதன் விளைவாக, ஈரானின் எரிசக்தி கட்டமைப்பைத் தாக்கும் திட்டத்தை ஐந்து நாள்களுக்கு ஒத்திவைப்பதாக அவர் கூறினார். இந்த அறிவிப்பால் பங்குச் சந்தைகள் உயர்ந்தன. மேலும், கச்சா எண்ணெய் விலை திடீரென வீழ்ச்சியடைந்து பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலருக்கும் கீழே குறைந்தது. டிரம்ப்பின் வார இறுதி மிரட்டல்கள் மற்றும் ஈரானின் பதிலடி சபதங்களால் சந்தையில் ஏற்பட்டிருந்த சரிவு இதன் மூலம் தற்காலிகமாக மாறியது.
இருப்பினும், இந்த முன்னேற்றங்களுக்கு செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 24) பின்னடைவு ஏற்பட்டது. ஈரானின் நாடாளுமன்ற நாயகர் முகம்மது பாகர் கலிபாஃப் பேச்சுவார்த்தையில் ஈரானிய தரப்பில் பங்கேற்றார் என இஸ்ரேலிய அதிகாரியும் மற்ற தரப்பினர்களும் தெரிவித்தனர். ஆனால், பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று திரு முகம்மது பாகர் கூறினார்.
“அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. நிதி மற்றும் எண்ணெய் சந்தைகளைக் கையாளுவதற்கும் அமெரிக்காவும் இஸ்ரேலும் சிக்கியுள்ள இக்கட்டான நிலையில் இருந்து தப்பிப்பதற்கும் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன,” என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிப் பாதுகாப்புப் படை அமெரிக்க இலக்குகள் மீது புதிய தாக்குதல்களைத் தொடுத்து வருவதாகக் கூறியதுடன், அதிபர் டிரம்ப்பின் வார்த்தைகளை ‘காலாவதியான உளவியல் போர்’ என்றும் இது ஈரான் தொடுக்கும் தாக்குதலைப் பாதிக்காது என்றும் தெரிவித்தது.
ஈரானிய அதிபர் மசூது பெசெஷ்கியான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் ஆகியோர் வட்டார மற்றும் உலகளாவிய பாதுகாப்பில் போரின் தாக்கம் குறித்து விவாதித்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
பிப்ரவரி 28ஆம் தேதியன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்கியதிலிருந்து, கப்பல் போக்குவரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இந்தப் போரில் இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
தனது மின் உற்பத்தி நிலையங்களைத் தாக்கப்போவதாக அதிபர் டிரம்ப் விடுத்த மிரட்டலுக்குப் பதிலடி கொடுத்த ஈரான், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளின் உள்கட்டமைப்புகள் தகர்க்கப்படும் என்று கூறியுள்ளது. இது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பு, எதிர்பார்க்கப்பட்டதைவிட நீண்டகாலம் நீடிக்கக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

