குவைத் சிட்டி: குவைத்தில் உள்ள ஆகாயப் படைத் தளம் ஒன்றின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கர்கள் பலர் காயமடைந்துள்ளனர். அத்துடன் அங்கிருந்த இரண்டு அமெரிக்க அதிநவீன ‘எம்கியூ-9 ரீப்பர்’ ரகத் தாக்குதல் ஆளில்லா வானூர்திகள் பலத்த சேதமடைந்துள்ளன.
ஈரானின் ‘ஃபதே-110’ ஏவுகணையை குவைத் வான்வெளிப் பாதுகாப்புப் படை இடைமறித்து அழித்த போதிலும், அலி அல் சலெம் ஆகாயப் படைத் தளத்தின் மீது விழுந்த அதன் இடிபாடுகளால் இந்தச் சேதம் ஏற்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் ராணுவ வீரர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் உட்பட ஏறத்தாழ ஐந்து பேருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன. மேலும், தலா 30 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இரண்டு ரீப்பர் ஆளில்லா வானூர்திகளில் ஒன்று முற்றிலும் அழிக்கப்பட்டதுடன், மற்றொன்று கடுமையாகச் சேதமடைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடப்பில் இருக்கும் தற்காலிகப் போர் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பரிசீலித்து வரும் வேளையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்து இறுதி முடிவு எடுக்க வெள்ளை மாளிகையின் சூழ்நிலைக் கண்காணிப்பு அறையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டம் எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்புமின்றி நிறைவடைந்துள்ளது.
பிப்ரவரி 28ஆம் தேதியன்று தொடங்கிய இந்த ஈரான் போரில், அமெரிக்கா தனது டோமஹாக் ஏவுகணைகள் மற்றும் பேட்ரியட் வான்வெளிப் பாதுகாப்பு ஏவுகணைகளை பேரளவில் பயன்படுத்தியுள்ளது.
‘ஆப்ரேஷன் எபிக் ஃபியூரி’ எனப் பெயரிடப்பட்டுள்ள ஈரானிய ராணுவ நடவடிக்கையில், இதுவரை 14 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் 409 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

