டெஹ்ரான்: ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள ஈரானியப் குழு, அமெரிக்காவுடன் எவ்விதப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடத் திட்டமிடவில்லை என்று ஈரானின் அரசு செய்தி ஊடகம் திங்கட்கிழமை (செப்டம்பர் 28) செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானுடன் விரைவில் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
“ஈரானின் கருத்துகளும் நிலைப்பாடும் கத்தார் சமரசப் பேச்சாளர் மூலமாக அமெரிக்கத் தரப்பிடம் வெளிப்படையாகவும் தெளிவாகவும் தெரிவிக்கப்பட்டுவிட்டன,” என்று ஐஆர்என்ஏ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானியப் பேராளர் குழு செவ்வாய்க்கிழமை நாடு திரும்பும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
போரை முடிவிற்குக் கொண்டுவரவும் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவும் ஏழு நிபந்தனைகளைத் தான் முன்வைத்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான போருக்குமுன் உலகின் எண்ணெய், எரிவாயு விநியோகத்தில் ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகவே நடைபெற்றுவந்தது.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான்மீது தாக்குதலைத் தொடங்கியபின், அந்நீரிணையே மோதலின் மையப்புள்ளியாகத் திகழ்ந்து வருகிறது.
தன்மீதான தாக்குதலைத் தொடர்ந்து, அந்த நீர்வழியை ஈரான் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. அதற்குப் பதிலடியாக ஈரானியத் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டது.
இதனிடையே, கத்தாரின் முன்னெடுப்பில் மறைமுக சமரசப் பேச்சுவார்த்தை திங்கட்கிழமை இடம்பெறலாம் என்று ஆக்சியோஸ் ஊடகம் தெரிவித்தது. முன்னதாக, அமெரிக்கத் தரப்பிலிருந்து ஸ்டீவ் விட்காப், ஜேரட் குஷ்னர் ஆகியோரும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சியும் ஒரு வாரத்திற்குமுன் இதேபோன்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
லெபனான் உட்பட மத்திய கிழக்கு வட்டாரம் முழுவதும் ஏழு நாள் போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று ஈரான் நிபந்தனை விதித்திருந்தது. லெபனானிலுள்ள ஈரானின் தோழமை அமைப்பான ஹிஸ்புல்லாமீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள தனது சொத்துகளை விடுவிப்பது, தனது எண்ணெய்த் துறைமீதான தடைகளை நீக்குவது, அமெரிக்கக் கடற்படை முற்றுகையைத் திரும்பப் பெறுவது போன்றவையும் ஈரான் விதித்துள்ள நிபந்தனைகளில் சில.
ஆனால், கடந்த சனிக்கிழமை அந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் அதிபர் டிரம்ப் நிராகரித்தார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள்மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டாலும் செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து ஈரான்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தவில்லை.
