அமெரிக்க ராணுவ வீரர்களைக் கொல்ல US$30,000 பரிசுத்தொகை வழங்கும் ஈரான்

அமெரிக்க ராணுவ வீரர்களைக் கொல்ல US$30,000 பரிசுத்தொகை வழங்கும் ஈரான்

2 mins read
dbf656a8-345e-40f8-9c8c-b9c1b610d6a4
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கோல்ஃப் விளையாடுவதைப் போல் சித்திரிக்கும் பதாகை வைக்கப்பட்டிருக்கும் வழியாக நடந்துசெல்லும் மக்கள். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

டெஹ்ரான்: அமெரிக்க ராணுவ வீரர்களைப் பிடித்தாலோ கொன்றாலோ 30,000 டாலருக்கு (38,280 வெள்ளி) நிகரான பரிசுத்தொகை வழங்கப்படும் என்று ஈரானிய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) அறிவித்தது.

அச்செயல்களை ஒரு பெண் செய்தால் பரிசுத்தொகை இரட்டிப்பாக்கப்படும் என்றும் ஈரான் குறிப்பிட்டது. இந்நடவடிக்கையில் பங்கேற்கப் பலர் முன்வந்ததைத் தொடர்ந்து இத்திட்டம் வரையப்பட்டுள்ளதாக ஈரானிய ராணுவத் தலைவர் அமீர் ஹத்தாமி கூறினார். ஈரானிய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிடடது.

தற்போதைய மத்திய கிழக்குப் பூசலின்போது ஈரானில் அமெரிக்கா, நிலத்தில் தனது படைகளை நிறுத்தியிருப்பதாகத் தற்போது தெரியவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கப் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து மீட்புப் பணிகளில் மட்டும் அமெரிக்கப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

அமெரிக்க ராணுவ வீரர்கள் எப்போது, எங்கு பிடிபடுவர் அல்லது கொல்லப்படுவர் ஆகிய விவரங்களை ஹத்தாமி தெரிவிக்கவில்லை.

“படையெடுக்கும் அமெரிக்க ராணுவ வீரர்களைக் கொல்லும் அல்லது பிடித்துத் தரும் ஒவ்வொருவருக்கும் 30,000 டாலர் அல்லது ஐந்து பில்லியன் தோமான்ஸ் அல்லது அவற்றுக்கு ஈடான தொகையை ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ராணுவம் வழங்கும்,” என்று ஹத்தாமி கூறினார்.

“இச்செயலை மேற்கொள்ளும் துணிச்சலான ஈரானியப் பெண்களுக்கான பரிசுத்தொகை இரட்டிப்பாக்கப்படும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா மத்திய கிழக்கு வட்டாரத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று ஈரான் எழுப்பிவரும் குரலை ஹத்தாமி வலியுறுத்தினார். பாரசீக வளைகுடாவினுள்ளோ ஓமான் வளைகுடாவினுள்ளோ ஹோர்முஸ் நீரிணையினுள்ளோ நுழைய அமெரிக்காவுக்கு இனி அனுமதி கிடையாது என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்ஈரான்அமெரிக்காபணம்