ஈரான் கலவரங்கள்: ஏறக்குறைய 140 வெளிநாட்டவர் கைது

ஈரான் கலவரங்கள்: ஏறக்குறைய 140 வெளிநாட்டவர் கைது

படம்: ராய்ட்டர்ஸ்

03 Feb 2026 - 8:55 pm

2 mins read

தெஹ்ரான்: ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் தொடர்பில் 139 வெளிநாட்டவரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

நாட்டின் மத்திய பகுதிகளில் கைது நடவடிக்கைகள் இடம்பெற்றன. ஈரானின் டஸ்னிம் செய்தி ஊடகம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) அதனைத் தெரிவித்தது.

கைதுசெய்யப்பட்டோர், கலவரங்களுக்கு வித்திட்டு, தூண்டிவிட்டு, அவற்றை அரங்கேற்றியதாகவும் சிலருக்கு நாட்டிற்கு வெளியே உள்ள கட்டமைப்புகளுடன் தொடர்பிருந்ததாகவும் யாஸ்ட் நகரின் காவல்துறைத் தலைவர் கூறினார்.

பிடிபட்டவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தோர் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

சென்ற ஆண்டு (2025) டிசம்பர் 28ஆம் தேதி ஈரானில் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வன்முறை ஆரம்பித்தது. பின்னர் அது நாடு முழுதும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமாக உருவெடுத்தது.

அண்மைக் கலவரங்களில் 3,000க்கும் அதிகமானோர் மாண்டதை ஈரான் உறுதிப்படுத்தியது. ஆனால் அவர்களில் பெரும்பாலோர் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களும் அப்பாவிப் பொதுமக்களும் என்று அது கூறியது. நாட்டில் நடந்த வன்முறையைப் பயங்கரவாதச் செயல் என்று தெஹ்ரான் வருணித்தது.

ஹ்ரனா எனும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட அரசாங்கம் சாரா அமைப்பு, ஈரானியக் கலவரங்களில் 6,854 பேர் மரணமடைந்ததாகக் கூறுகிறது. அவர்களில் பெரும்பாலோர் ஆர்ப்பாட்டக்காரர்கள் என்றும் அவர்களைக் கொன்றது பாதுகாப்புப் படையினரே என்றும் அது குறிப்பிட்டது. அதே நேரம், மாண்டோர் எண்ணிக்கை இன்னும் அதிகம் இருக்கக்கூடும் என்று மற்ற மனித உரிமைக் குழுக்கள் கருதுகின்றன.

ஊர்வலங்கள் முதலில் அமைதியாய்த் தொடங்கியதாகச் சொன்ன ஈரானிய அதிகாரிகள் பின்னர் அவை கலவரங்களாய் உருமாறியதாகத் தெரிவித்தனர். பரமவைரிகளான அமெரிக்காவும் இஸ்ரேலுமே வன்முறையைத் தூண்டிவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
ஈரான்ஆர்ப்பாட்டம்கைது