கொழும்பு: ஈரான் இலங்கையிலிருந்து 251 கடலோடிகளைத் திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளது. அவர்களில் 32 பேர் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் இம்மாதத் தொடக்கத்தில் மூழ்கடித்த டெஹ்ரானின் ‘ஐரிஸ் டெனா’ கப்பலில் இருந்தவர்கள். எஞ்சியோர் ‘ஐரிஸ் புல்ஷெர்’ கப்பலின் கடலோடிகள்.
அதுகுறித்து இலங்கையுடன் பேசிவருவதாக ஈரானியத் தூதர் அலிரெஸா டெல்கோஷ் திங்கட்கிழமை (மார்ச் 23) தெரிவித்தார்.
இரண்டு கப்பல்களின் கடலோடிகளும் நாடு திரும்ப விரும்புவதாக டாக்டர் டெல்கோஷ் கூறினார்.
“இந்தப் பிரச்சினை குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேசி வருகிறோம். விரைவில் தீர்வுகாண முடியும் என்று நம்புகிறோம்,” என்றார் டாக்டர் டெல்கோஷ். ஈரானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசினார். அது உள்நாட்டு ஊடகங்களில் ஒலிபரப்பப்பட்டது. அனைத்துலக ஊடகங்களுக்கு அனுமதி தரப்படவில்லை.
“இலங்கை, அவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்கிறது. அவர்களின் ஒரே கவலை, குடும்பத்தைப் பிரிந்து இருப்பது,” என்று ஈரானியத் தூதர் கூறினார்.
ஈரானின் வேண்டுகோள் குறித்து இலங்கை உடனடியாகக் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

