வாஷிங்டன்: பஹ்ரேன், குவைத், ஜோர்தானில் உள்ள அமெரிக்க இலக்குகளைக் குறிவைத்து ஈரான் புதன்கிழமை (செப்டம்பர் 2) தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.
அமெரிக்கத் தாக்குதல்களுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் கூறியதைத் தொடர்ந்து அதன் அண்மை நடவடிக்கை வந்துள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஒன்று, திருமணக் கொண்டாட்டத்தில் நான்கு பேரின் உயிரைப் பறித்ததாக ஈரானிய செம்பிறைச் சங்கம் தெரிவித்தது.
ஜோர்தானில் உள்ள அமெரிக்கக் கடற்படைத் தளமான ‘கேம்ப் டிடின்’ மீது புவியீர்ப்பு ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் புரட்சிக் காவற்படை கூறியது. ஈரானின் தஸ்னிம் செய்தி ஊடகம் அந்தத் தகவலை வெளியிட்டது.
ஈரானில் இருந்து ஏவப்பட்ட 10 புவியீர்ப்பு ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக ஜோர்தானிய ராணுவம் தெரிவித்தது. அத்துடன் இஸ்ரேலிய, சவூதி அரேபிய எல்லைகளுக்கு அருகில் அக்காபா வளைகுடாவில் அமைந்துள்ள அமெரிக்கப் பயிற்சி முகாமுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதாக அது கூறவில்லை. மேலும் மூன்று ஏவுகணைகள் ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் விழுந்ததாக ஜோர்தானிய ராணுவம் குறிப்பிட்டது.
குவைத்திலும் ஏவுகணை, ஆளில்லா வானூர்தித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகப் பதிவாகியுள்ளன. அங்கு ஈரானின் நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுத்துவருவதாகக் குவைத் ராணுவம் தெரிவித்தது. பஹ்ரேனில் புதன்கிழமை அதிகாலையில் வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி கேட்டதாக ஏஎஃப்பி நிறுவனத்தின் செய்தியாளர்கள் கூறினர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானியத் தீவை அமெரிக்கா தாக்கியது. அதற்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ இலக்குகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
அதனைத் தொடர்ந்து, ஈரானைக் கடுமையாய்த் தாக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்திருக்கிறார்.


