தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேலுக்குப் பதிலடி தருவது குறித்து யோசிக்கும் ஈரான்

2 mins read
60e968a4-17af-4bc3-bb44-15388454e134
இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்தால் ஈரானின் பொருளியல் மேலும் தடுமாறும் என்று கூறப்படுகிறது.  - படம்: நியூயார்க் டைம்ஸ்

பெர்லின்: இஸ்ரேல், ஈரான்மீது சனிக்கிழமை (அக்டோபர் 26) தாக்குதல் நடத்தியது. இது மத்திய கிழக்கு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தலாமா, வேண்டாமா என்று ஈரான் யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்தால் ஈரானின் பொருளியல் மேலும் தடுமாறும் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே ஈரானின் பொருளியல் திணறி வருகிறது, ராணுவ பலத்திலும் பிரச்சினை உள்ளது. கூடுதலாக நாட்டின் அடுத்த தலைவர் யார் என்பதற்கு தெளிவான முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. இதனால் இஸ்ரேலுடன் போர் புரிவது முக்கியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பதிலடி தராவிட்டால் ஈரான் அதன் நட்பு நாடுகள் முன் பலம் குன்றிய நாடாகப் பார்க்கப்படும், அதன் குரலுக்கு மதிப்பில்லாமல் போகும் நிலையும் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலைத் தாக்கினர். அதன் பின்னர் இஸ்ரேல் காஸாமீது போர் தொடுத்தது.ஹமாஸின் கட்டமைப்பிற்கு பெரிய அளவில் சேதம் ஏற்படுத்தியது இஸ்ரேல்.

ஈரான் ஆதரவில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு, ஹூதி கிளர்ச்சியாளர்கள், சிரியா, ஈராக்கில் உள்ள போராளிகள் மீதும் இஸ்ரேல் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் ஆதரவு போரளிகளுக்கு எதிராக இஸ்ரேலின் தாக்குதல் ஈரானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். மேலும் அது ஈரானை வலுவிழந்த படையாக காட்டுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இதற்கிடையே இஸ்ரேலுடன் நேரடியாக போரில் இறங்கத் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலை சுற்றியுள்ள தங்களது ஆதரவு அமைப்புகள் மூலமே தாக்குதல் நடத்த ஈரான் விரும்புகிறது.

இஸ்ரேல் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை என்று ஈரான் கூறுகிறது. இருப்பினும் ஈரான் உண்மையை முழுமையாக சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், இஸ்ரேலுக்கு உடனடி பதிலடி கொடுப்பது குறித்து அது கருத்து தெரிவிக்கவில்லை.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வர்த்தக தடையால் ஈரான் பல பொருளியல் சவால்களை சந்தித்து வருகிறது. அதனால் ஈரான் ர‌ஷ்யாவுடனும் சீனாவுடனும் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது.

இதனால் ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக முழுமையான போரில் கலந்துகொள்ளாது என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்ஈரான்ஹமாஸ்