நியூயார்க்: ஈரானியத் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிடுவது தனது தன்னாட்சி முறை தொடர்பில் கடுமையான விதிமீறலாகும் என்று ஈரான் வன்மையாகக் கண்டித்துள்ளது.
திங்கட்கிழமை (ஏப்ரல் 13) அமெரிக்கா, ஈரானியத் துறைமுகங்களை முற்றுகையிட்டது. தற்போது நடப்பில் இருக்கும் போர்நிறுத்தம் எந்நேரமும் மீறப்படலாம் என்ற அச்சம் நிலவும் வேளையில் ஈரான், அமெரிக்காவின் செயலைக் கண்டித்துப் பேசியுள்ளது.
“கடல்துறையில் இவ்வாறு முற்றுகையிடும் செயல், ஈரானின் தன்னாட்சி முறை, எல்லை சார்ந்த உரிமையின் தொடர்பில் கடுமையான விதிமீறலாகும்,” என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான (ஐநா) ஈரானியத் தூதர் அமிர் சயீத் இரவானி, அமைப்பின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெசுக்குக் கடிதம்வழி குறிப்பிட்டார்.
அக்கடிதத்தை ஏஎஃப்பி செய்தி நிறுவனம் பார்த்தது.
இச்செயல் சட்டவிரோதமானது என்று வகைப்படுத்தியுள்ள திரு இரவானி, இது கடல் போக்குவரத்துக்கான அனைத்துலகச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப் பெரிய அளவில் மீறுவதாகும் என்றும் சாடினார்.
ஈரானியத் துறைமுகங்கள், வளைகுடாப் பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதிகள் ஆகியவற்றில் நுழையும் அல்லது வெளியேறும் கப்பல்களை முற்றுகையிடுமாறு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) உத்தரவிட்டார்.
கடந்த வார இறுதியில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து அவர் இவ்வாறு உத்தரவிட்டார்.
முற்றுகையின்போது தாக்குதல் முயற்சியில் ஈடுபடும் எல்லா ஈரானியப் படகுகளும் அழிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்புடைய செய்திகள்
முற்றுகை நடவடிக்கை சிங்கப்பூர் நேரப்படி திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு நடப்புக்கு வந்தது.
ஈரானும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்ட போர்நிறுத்தம் நடப்பில் இருந்துவரும் வேளையில் இச்செயல் இடம்பெற்றுள்ளது.
போர்நிறுத்தத்துக்கு இணங்கி நடந்துகொள்ளுமாறு இருதரப்புக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த பாகிஸ்தானும் மற்றொரு வளைகுடா நாடான கத்தாரும் கேட்டுக்கொண்டுள்ளன.
திரு குட்டெரெஸ், ஹோர்முஸ் நீரிணைக்கான போக்குவரத்துச் சுதந்திரத்தை மதித்து நடக்குமாறு எல்லாத் தரப்பினரையும் திங்கட்கிழமை வேண்டினார். முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை முதலில் ஈரானும் பின்னர் அமெரிக்காவும் மூடி வைத்ததைத் தொடர்ந்து அவர் அவ்வாறு கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சைப் பொறுத்தவரை அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பிலான முடிவை ஈரான்தான் எடுக்கவேண்டும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் கூறியுள்ளார். வார இறுதியில் பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா திரும்பிய பிறகு திரு வான்ஸ் இவ்வாறு சொன்னார்.

