கோலாலம்பூர்/ஜகார்த்தா: அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க, இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளைக் கைவிட்டு அரசதந்திர ரீதியிலான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என மலேசியப் பிரதமர் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மோதலை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் அனைத்தும் துரிதமாகச் செயல்படவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகம் சனிக்கிழமையன்று (பிப்ரவரி 28) தெரிவித்தது.
இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கு வட்டாரத்தைப் பேரழிவின் விளிம்பிற்கு இட்டுசெல்லும் என்றார் அவர்.
ஈரான், அவ்வட்டாரத்தின் பிற பகுதிகளில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பு குறித்து தமது கவலையை வெளிப்படுத்திய திரு அன்வார், இது குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக வட்டாரப் பங்காளிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, அமெரிக்கா - ஈரான் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடத்த டெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்ளவும் தாம் தயாராகவுள்ளதாக இந்தோனீசிய அதிபர் பிரபாவோ சுபியாந்தோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிப்ரவரி 28ஆம் தேதி இந்தோனீசிய வெளியுறவு அமைச்சு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும் பேச்சுவார்த்தை,அரசதந்திரம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளது.

