துபாய்: ஈரானிய, அமெரிக்க அதிகாரிகள் இவ்வாரம் டோஹாவில் சந்திக்கவிருப்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இதற்கு முன்னர் அவர்கள் சந்திக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் எந்தவொரு சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று ஈரான் கூறுகிறது.
இருதரப்பும் வார இறுதியில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. அண்மையில் அவை செய்துகொண்ட சண்டை நிறுத்த உடன்பாட்டுக்குத் தாக்குதல்கள் சோதனையாக அமைந்தன.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அவரின் மருமகன் ஜேரட் குஷ்னரையும் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃபையும் சமரசக் குழுவுக்குத் தலைமையேற்றுச் செல்லும்படி கூறியிருக்கிறார். அதிபரின் பத்திரிகைச் செயலாளர் கேரலின் லீவிட் அந்தத் தகவலைத் தெரிவித்தார்.
இந்நிலையில், ஈரான் அதன் பேராளர் குழுவை இவ்வாரம் கத்தாருக்கு அனுப்புகிறது. அமெரிக்கக் குழுவினரின் பயணத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை என்கிறார் ஈரானின் வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் இஸ்மாயில் பாகே. இருதரப்புக்கும் இடையில் பேச்சு எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.
“வரும் நாள்களில் அமெரிக்கத் தரப்புடன் எந்த நிலையிலும் சமரசக் கூட்டம் எதற்கும் திட்டமிடப்படவில்லை,” என்று திரு பாகே சொன்னார்.
இம்மாதம் 17ஆம் தேதி, அமெரிக்காவும் ஈரானும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டன.
ஈரான்-அமெரிக்க அமைதிப் பேச்சில் இஸ்ரேல் பங்கேற்கவில்லை. ஈரானும் அமெரிக்காவும் செய்துகொண்ட சண்டை நிறுத்த உடன்பாட்டிலிருந்தும் அது விலகியே இருக்கிறது.
ஜூன் 30ஆம் தேதியன்று டோஹாவில் ஒரு சந்திப்பு நடைபெறும் என்றும் ஆனால் சுவிட்சர்லாந்தில் ஈரான் மற்றும் அமெரிக்கக் குழுக்களுக்கு இடையே இதற்கு முன்னர் நடந்த தொழில்நுட்பப் பேச்சுவார்த்தைகளைப் போலல்லாமல், ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிப்பது மற்றும் பதற்றங்களைத் தணிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்றும் ஒரு மூத்த ஈரானிய அதிகாரி கூறினார்.
திட்டங்கள் குறித்து அறிந்த மற்றோர் அதிகாரி, அமெரிக்க மற்றும் ஈரான் தொழில்நுட்பக் குழுக்கள் ஜூலை 1ஆம் தேதி, கத்தார், பாகிஸ்தான் சமரசக் குழுவினரைத் தனித்தனியாகச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.
“டோஹாவில் நடக்கும் சந்திப்பு ஒருவேளை முக்கியமானதாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,” என்று தனது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் திரு டிரம்ப் கூறினார்.

