ஈரானுடன் நல்லுறவு வேண்டும்; ஆனால், ராணுவ நடவடிக்கை எடுக்கவும் அமெரிக்கா தயங்காது: டிரம்ப்

போர் மேகம் சூழும் அபாயம்: தொடங்கியது ஈரான் அமெரிக்க பேச்சுவார்த்தை

ஈரானுடன் நல்லுறவு வேண்டும்; ஆனால், ராணுவ நடவடிக்கை எடுக்கவும் அமெரிக்கா தயங்காது: டிரம்ப்

2 mins read
3fe57432-d2f0-4037-8963-dd66855b34a7
ஒமன் வெளியுறவு அமைச்சர் பதர் ஹமாத்துடன் கைகுலுக்கும் அமெரிக்க உயர்மட்டக் குழு சிறப்பு அரசதந்திர அதிகாரி ஸ்டீவ் விட்காஃப். - படம்: ஏஎஃபி

வாஷிங்டன்: ஈரானுடனான பேச்சுவார்த்தையில் அரசதந்திர நல்லுறவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றபோதும் தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளவும் அமெரிக்கா தயங்காது என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்.

அணுசக்தித் திட்டம் தொடர்பாக, அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையை தொடங்கியது ஈரான்.

கடந்த ஆண்டிறுதியிலிருந்து ஈரானில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். 

விலைவாசி உயர்வு, வறுமை, பொருளியல் வீழ்ச்சி எனப் பல காரணங்களால் அரசுக்கு எதிராக பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் ஆர்ப்பாட்டக்காரர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.  இதற்கிடையே ஈரானில் நிலவும் இத்தகைய அசாதாரண சூழல்களுக்கு மத்தியில் ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை ஓமன் நாட்டில் பிப்ரவரி 6 (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

அணுவாற்றல் செல்வாக்குமிக்க ஈரானின் உள்நாட்டு கொள்கைகளில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தலையிடுவதற்கு ஈரானின் சமயத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி பலத்த எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதிலடி தரும் விதமாக அமெரிக்க அதிபர், ‘‘ஈரானின் சமயத் தலைவர்களும் ஆட்சியாளர்களும் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்,’’ என்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இருதரப்பும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

முதலில் துருக்கியில் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை, ஈரான் வெளியுறவு அமைச்சு விடுத்த கோரிக்கையால் ஓமனுக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இருநாடுகளும் தங்களுக்கு இடையேயான அரசதந்திர உறவைப் புதுப்பித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதாகக் கூறிக்கொண்டாலும் பேச்சுவார்த்தையில் ஈரான் விரும்பாத பல்வேறு அம்சங்களையும் கொண்டுவர அமெரிக்கா விரும்புகிறது.

குறிப்பாக, அனைத்துலகப் பங்காளித்துவத்துடன் ஈரானின் அணுவாயுதக் கொள்கைகள், ஏவுகணை ஆயுதக் கிடங்கு, அதன் வட்டார ஆயுதக் குழுக்கள், ஈரான் மக்களை நாடு எவ்வாறு நடத்த வேண்டும்? உள்ளிட்ட உள்விவகாரமும் பேச்சுவார்த்தையில் இடம்பிடிக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இத்தகவலை அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மார்கோ ருஃபியோ உறுதிப்படுத்தினார்.

ஆனால் மஸ்கட் அணுசக்திப் பிரச்சினை குறித்து மட்டுமே அமெரிக்காவுடன் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்‌ஷி பேச வேண்டும் என்று ஈரான் விரும்புகிறது.

“ஈரான் வெளிப்படைத்தன்மையுடனும் கடந்த ஆண்டின் நிலையான நினைவுகளுடனும் அரசதந்திர பேச்சுவார்த்தையில் நுழைகிறது.

‘‘நல்லெண்ணம் மேலோங்க, எங்கள் உரிமைகளில் உறுதியாக நிற்கிறோம். வாக்குறுதிகள் மதிக்கப்பட வேண்டும்.

‘‘பரஸ்பர ஆதரவும் மரியாதையும் முக்கியம்,’’ என்றும் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக வெள்ளிக்கிழமை திரு அராக்‌ஷி அவரது ‘எக்ஸ்‘ பக்கத்தில் கூறினார்.

இதற்கிடையே, ஈரான் கடற்பகுதியில் வலிமை வாய்ந்த ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்‘ போர்க்கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஈரானில் இருக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்பாக வெளியேறும்படி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்